சிவகங்கை ஆட்சியர், அலுவலக கூட்டரங்கில் தமிழக சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தை தலைமையேற்று நடத்திய அமைச்சர் உதயநிதி திருப்பத்தூர் வட்டாரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அரசு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதில், மணுதாரர் ஒருவர் தங்கள் பகுதியில் புதர்மண்டி கிடப்பதாகவும், அதனை அகற்ற கோரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு மனு அளித்து இருந்தார்.
இந்த மனுவின் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரான சோமதாசனிடம் அமைச்சர் உதயநிதி விளக்கம் கேட்டார். அப்போது, பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாசன் புகாரின் பேரில் புதர்மண்டி கிடந்ததை அப்புறப்படுத்தி விட்டதாக அமைச்சர் உதயநிதிக்கு பதில் அளித்தார். ஆனால், அமைச்சர் உதயநிதி அதிரடியாக அதிகாரி உண்மையிலேயே நடவடிக்கை எடுத்தாரா? என்பதை கண்டுப்பிடிக்க மனுதாரருக்கே போன் செய்து விளக்கம் கேட்டார்.
அதில், வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாசன் எந்த வித பணியையும் மேற்கொள்ள வில்லை என்று மனு தாரர் மறுப்பு தெரிவித்தார். இதனால், அதிருப்தியடைந்த அமைச்சர் உதயநிதி வட்டார வளர்ச்சி அலுவலரை எச்சரித்துவிட்டு, அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், துறைரீதியான நடவடிக்கை அதிகாரி மீது எடுக்க வேண்டும் என்றும் கூறிவிட்டு கூட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பிச் சென்ற நிலையில், அமைச்சரின் ஆய்வு கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாகப் பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலரை பணியை முறையாகச் செய்ய வில்லை எனக்கூறி பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். அத்துடன், அங்கன்வவாடி பணியாளர்கள் தாமதமாக பணிக்கு வருவதாக அமைச்சரிடம் ஆய்வு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீதும் விசாரணை நடத்தி துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி உத்தரவிட்டு சென்றிருந்தார்.
இதையடுத்து, புகரில் சிக்கிய அங்கன்வவாடி பணியாளர்களும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்த அடுத்த சில மணி நேரங்களிலேயே அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தால், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அடிக்கடி அமைச்சர் இது போன்று ஆய்வு பணியில் ஈடுபட்டு அதிகாரிகள் முறையாக பணி செய்கின்றனரா என்று உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் தவறான தகவலை அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது வரவேற்பறை பெற்றுவரும் சூழலில் இது அரசு ஊழியர்கள் மத்தில் சிறிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.