
தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதன்முறையாக உதயநிதி கலந்து கொள்கிறார். இந்த விழா ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் மாவட்ட கட்சி பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருவேங்கடநாத பெருமாள், கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 117 ஏக்கர் நிலம் உள்ளது. அதை சரிவர பராமரிக்காததால், அந்த நிலங்கள் முழுவதுமே சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் இத்தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான சக்கரபாணி இத்தொகுதியை பசுமை தொகுதியாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொகுதி முழுவதும் மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறார். அதோடு தொகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் ஊராட்சி மூலம் அகற்ற சொல்லியதுடன் மட்டுமல்லாமல் சீமைக்கருவேலம் இல்லாத ஊராட்சிக்கு ரூ. 10 லட்சம் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அந்தந்த ஊராட்சிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். அதன் அடிப்படையில் ஊராட்சிகளில் உள்ள சீமைக்கருவேல முட்களை அகற்றும் பணிகளில் ஊராட்சி தலைவர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்பொழுதுதான் இடையகோட்டை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் சீமைக்கருவேலம் படர்ந்து இருப்பதை கண்டு, அதை சுத்தம் செய்து, மரக்கன்றுகளை நட்டு, ஒரு பசுமை புரட்சியை உருவாக்க வேண்டும் என்று, அமைச்சர் சக்கரபாணி முடிவு செய்து, அதற்கான பணிகளையும் துவக்கி வைத்தார். அதன் அடிப்படையில்தான் கடந்த 2 மாதங்களில் ஒட்டு மொத்த இடங்களையும் ஆயிரக்கணக்கான பேரை வைத்து சுத்தம் செய்து அங்கங்கே கை மிஷின்கள் மூலம் குழி எடுத்து அதை சீரமைப்பதற்காக தினசரி 3000க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்களை வைத்து சுத்தம் செய்து இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துவிட்டது. அது போல் அமைச்சரின் இந்த முயற்சிக்காக தொகுதியில் உள்ள ஒட்டுமொத்த கட்சி பொறுப்பாளர்களும் உள்ளாட்சி பொறுப்பாளர்களும் ஒட்டு மொத்தமாக களமிறங்கியும் பணிகளை செய்தனர். இதில் மா, வேம்பு, நாவல், இழுவை, அத்தி, புளி, தேக்கு உள்பட 43 வகையான மரக்கன்றுகள் நட உள்ளனர். இந்த மரக்கன்றுகளும் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் இருக்கும் நர்சரிகள் மற்றும் வேளாண்மை கல்லூரிகள் வனத்துறை மூலமாகவும் வாங்கப்பட்டிருக்கிறது.

இப்படி வாங்கப்பட்ட 6 லட்சம் மரக்கன்றுகளைத் தான் 6 மணி நேரத்தில் 6 ஆயிரம் பேரை கொண்டு நடவு செய்து உலக கின்னஸ் சாதனை படைக்க போகிறார்கள். ஏற்கனவே 14 மணி நேரத்தில் பல பகுதிகளில் 6 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வெளிநாட்டில் உலக சாதனை படைத் திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இப்படி ஒரே இடத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடுவது முதல் முறையாகும். அதனாலேயே அமைச்சர் சக்கரபாணியின் இந்த செயல் உலக கின்னஸ் சாதனையில் இடம்பெறப் போகிறது. இந்த விழாவுக்காகத்தான் அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி அழைப்பின் பேரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 23 ஆம் தேதி முதன்முதலில் கலந்து கொண்டு 6 லட்சத்து ஒன்றாவது மரக்கன்றை நட்டு உலக சாதனை படைக்க வருகிறார். அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகரில் மிகப் பிரமாண்டமாக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் கலந்துகொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நலிவடைந்த கட்சிக்காரர்கள் 5 ஆயிரம் பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி வழங்க இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் ஏற்பாட்டில் நகரில் சில பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடப்பட்டிருக்கும் கம்பங்களில் கட்சிக்கொடியை உதயநிதி ஸ்டாலின் ஏற்ற இருக்கிறார். இந்த ஏற்பாடுகளை ஐ.பி.செந்தில்குமார் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். உதயநிதி அமைச்சரான பிறகு முதன்முறையாக திண்டுக்கல்லுக்கு வர இருப்பதால் அவருக்கு மிக பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் இளைஞர் அணியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.