/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4235.jpg)
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (22.05.2023) சென்னை தலைமைச் செயலகத்தில், கோவை மாவட்டத்தை சேர்ந்த மிதிவண்டி வீராங்கனை (Cycling) செல்வி ஷா. தபித்தாவிற்கு போட்டிகளுக்கென்று பிரத்யேகமாக வடிவைமைக்கப்பட்ட ரூபாய் 13.99 லட்சம் மதிப்பிலான மிதிவண்டியை வழங்கினார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வரும் செல்வி ஷா. தபித்தா, சைக்கிளிங் வீராங்கனை ஆவார். இவர் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அசாம் மாநிலத்தில் கவுகாத்தியில் நடைபெற்ற14 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் (Track) வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.
ஜனவரி 2023-ஆம் வருடம் மகாராஷ்ட்ரா மாநிலம், நாசிக்கில் 07.01.2023 முதல் 10.01.2023 வரை நடைபெற்ற 27-வது தேசிய அளவிலான மிக இளையோர் (மகளிர்) சைக்கிளிங் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
தேசிய அளவில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெற்று, தற்பொழுது National Centre of Excellence (NCOE) மூலமாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி மேற்கொண்டுவரும், செல்வி. ஷா தபித்தா, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறுவதற்குரிய பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அதற்கு ஏதுவாக போட்டிகளுக்கென்று பிரத்யேகமாக வடிவைமைக்கப்பட்ட மிதிவண்டி வழங்கினால் பல்வேறு சாதனைகளை படைத்து நமது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க முடியும் என்று அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அவரது கோரிக்கையினை பரிசீலித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மிதிவண்டி வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, குறிப்பிட்ட மிதிவண்டியை, சைக்கிளிங் வீராங்கனை செல்வி ஷா தபித்தா கேட்டுக்கொண்டபடி தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூபாய் 13.99 லட்சம் மதிப்பீட்டிலான மிதிவண்டியை வாங்கினர்.
அந்த மிதிவண்டியை ஷா தபித்தாவுக்கு இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார் அமைச்சர் உதயநிதி. இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தனது கோரிக்கையினை ஏற்று மிதிவண்டி வழங்கிய அமைச்சர் உதயநிதிக்கும் அதிகாரிகளுக்கும் நன்று சொன்னதோடு, "சர்வதேச அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு, வெற்றிப்பெற்று நம் தமிழ்நாட்டிற்கு பெருமைத் தேடி தருவேன்" என்றார் வீராங்கணை செல்வி ஷா தாபித்தா.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)