இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு ‘காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்’ என்ற திருக்குறளைக் கூறி தனது பட்ஜெட் உரையைத் தொடங்கி அதற்கான விளக்கத்தையும் தெரிவித்தார். அதில் ‘குடிமக்கள் எளிதில் அணுகக்கூடியவராகவும், கடுமையான சொற்களை கூறாது ஆட்சி புரிந்து வரும் அரசனினை உலகமே போற்றும். அதேபோல் கடைக்கோடி மக்களும் எளிதில் அணுகக்கூடியவராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டுக்கு பெருமை’ எனத் தெரிவித்தார்.
மேலும் பட்ஜெட் உரையில், “நிதிநிலை அறிக்கையை தயாரிக்க வழிகாட்டிய முதலமைச்சருக்கு நன்றி. இந்தியாவின் 2 வது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டது தமிழ்நாடு. தமிழக அரசின் நலத்திட்டங்கள் தமிழர்களை தலைநிமிரச் செய்துள்ளன. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 100 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் தமிழர்களை தலைநிமிரச் செய்தன, செய்துள்ளன. 100 ஆண்டுகளுக்கு முன்பு 1924ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மேட்டூர் அணை கட்டும் அறிவிப்பு வெளியானது. 1990 இல் கலைஞர் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சார அறிவிப்பு, விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழின் இரட்டைக் காப்பியங்காளான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை 25 இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகளுக்கு சென்றடையும் வகையில் இந்த நூல்களை மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். செழுமையான தமிழ் இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லவும், சிறந்த பண்ணாட்டு அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் தமிழில் பல படைப்புகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியை 2 வது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தியது. இதில் 40 நாடுகளில் இருந்து 75க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்க்க 483 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட மொத்தம் 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.
தமிழ் மொழியை நவீனப்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை, முசிறி, தொண்டி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு நடத்தப்படும். ரூ. 65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும். கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும். சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.
2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டப்படும். கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்ட ரூ. 356 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.