Skip to main content

“மதுரை ஆதினத்திற்கு பதில் சொல்ல அவசியம் இல்லை..” - அமைச்சர் சேகர் பாபு 

Published on 06/06/2022 | Edited on 06/06/2022

 

Minister Sekar Babu addressed press in chidambaram natarajar temple

 

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திங்கள் கிழமை காலை திடீர் என வருகை தந்தார். அவரை தீட்சிதர்கள் வரவேற்றனர். பின்னர் அவர், கோவில் கனகசபையில் (சிற்றம்பல மேடை) ஏறி நடராஜரை தரிசனம் செய்தார். பின்னர் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

 

பிறகு ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரே தரையில் அமர்ந்து தீட்சிதர்களுடன் பேசினார். அப்போது தீட்சிதர்கள் கோயிலின் நிர்வாகம் எப்படி நடைபெற்று வருகிறது, கோயில் பூஜைகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிற்கு விளக்கமளித்தனர். அப்போது கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்தும் விளக்கம் அளித்தனர். அமைச்சர், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும், இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினார். அதனால் கோயிலுக்கு ஆய்வு செய்ய வரும் குழுவிற்கு ஒத்துழைப்பு அளியுங்கள் எனவும் கூறினார். எதையுமே தடுப்பதால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் ஒத்துழைப்பு கொடுங்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தீட்சிதர்கள் சம்பந்தப்பட்ட அவர்களது கோரிக்கையையும் அரசின் நிலைப்பாடும் பகிர்ந்து கொண்டோம். இந்து அறநிலையத்துறை சட்டதிட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து யாருக்கும் எந்த அளவிலும் சிறு மனக் கஷ்டமும் இல்லாமல் அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் அன்பான வேண்டுகோள். சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமாக ஒரு சுமூக தீர்வு ஏற்படும் என எனக்கு தோன்றுகிறது. இந்த ஆட்சி துலாக்கோல் போன்றது. அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. 

 

மதுரை ஆதினம் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான், செய்திகளில் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என்பதற்காக அவர் சொல்லுகிறார். அவர் ஒருவர் மட்டும்தான் அப்படி சொல்கிறார். முன்தினம் கூட தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றிருந்தோம். அவர் நல்ல முறையில் உபசரித்தார். 26 ஆயிரம் மரக் கன்றுகள் நடக்கின்ற திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் துவங்கி வைத்தார். அவர் கட்டிய இருபத்தி நான்கு அறைகளை என்னை கொண்டு திறக்க வைத்தார். யாரோ ஒருவர் அப்படி இருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்தமாக ஆதினங்களையும், ஜீயர்களையும் தீட்சிதர்களையும் குறை சொல்வது ஏற்புடையதல்ல. அனைவரும் தமிழக முதல்வரின் பக்கம் தான் இருக்கிறார்கள். ஆகவே ஏதோ ஒரு ஆதீனம் பேசுவதற்காக அதற்கெல்லாம் பதில் சொல்ல அவசியம் இல்லை” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஆறுதலுக்கு வராத பிரதமர், ஆதாயத்திற்கு மட்டும் வருகிறார்' - அமைச்சர் சேகர்பாபு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Why is the prime minister coming six times this year alone?'-Minister Shekharbabu

'மக்கள் துயரத்தில் இருக்கும் பொழுது ஆறுதல் சொல்ல வக்கில்லாத பிரதமர், இந்த ஆண்டு மட்டும் ஆறு முறை தமிழகத்திற்கு வந்திருக்கிறார்' என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ''இன்று ஒரு சில தலைவர்கள் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்துவிட்டு, ஏதோ தமிழ்நாட்டில் தொடர்ந்து பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து தமிழக மக்களுக்கு உழைத்தது போலவும், தமிழக மக்களுக்கு நன்மை செய்தது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் என்பதால் சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை கொள்கை என்பது அண்ணா சொன்னது போல இடுப்பில் கட்டிய வேட்டி தான். பதவி என்பது தோளில் போட்டுக் கொண்ட துண்டு தான்.

இயக்கத்திற்காகவும், இயக்கத்தின் தலைவருக்காகவும் எதை வேண்டுமானாலும் இழப்பதற்கு தயாராக இருக்கின்ற இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்த மேடையில் நான் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். மக்களுடைய துயரம் களைவதற்கு, துன்பப்படுகின்ற மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு தமிழகத்திற்கு வருவதற்கு வக்கில்லாத பாரத பிரதமர், அரசியல் ஆதாயத்திற்காக இந்த ஆண்டு மட்டும் ஆறு முறை வந்திருக்கிறார். இன்னும் இரண்டு முறை இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் வருவதாக இருக்கிறார்.

நான் பாஜகவினருக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சொல்வது என்னவென்றால் உங்களுடைய பாரத பிரதமர் தண்ணீருக்கு கீழ் தவம் இருந்தாலும் சரி, தரையின் மீது தவம் இருந்தாலும் சரி, அல்லது ஓடுகின்ற வாகனத்தின் மீது அமர்ந்து தவம் இருந்தாலும் சரி, பறக்கும் விமானத்தின் மீது அமர்ந்து தவம் இருந்தாலும் சரி தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும். அந்த வெற்றியை தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிப்போம்'' என்றார்.

Next Story

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உழவாரப் பணிகள் குறித்து ஆய்வு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 study on tillage work at Chidambaram Natarajar temple

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் கோட்ட பொறியாளர் அசோகன் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் செந்தில்வேலன், மண்டல ஸ்தபதி, கோயில்கள் ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் அடங்கிய கோயில் உழவாரப் பணிகள் குறித்த நிலையான ஆய்வுக் குழுவினர் கோயிலில் பல்வேறு இடங்களில் கோயில் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது. சுத்தமாக உள்ளதா? என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவர்கள் தெற்கு கோபுர வாயில், மேல கோபுர வாயில், கோயில் உட்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இது குறித்து இணை ஆணையர் பரணிதரன், கோயில்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வு செய்ததாகவும் இது குறித்த தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கோவில்களில் வெளி பிரகாரங்களில் கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதையும், தெற்கு வீதி, கீழ வீதி கோபுரம் அருகில் மாட்டு தொழுவம் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு மாட்டு சாணிகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்காமல் அவதிப்படுவதாக உழவார பணிகள் ஆய்வுக் குழுவினரிடம் தெரிவித்தனர். இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்கள்.

முன்னதாக ஆய்வுக் குழுவினர் கோயிலுக்கு உள்ளே வரும்போது இது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இந்து அறநிலையத்துறைக்கும் கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை. இங்கு உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்வது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இது உள்நோக்கம் கொண்டது என கோயில் தீட்சிதர்களின் செயலாளர் ஆய்வு குழுவினரிடம் கடிதம் அளித்துள்ளார். கோயிலில் உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்தது கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.