அமைச்சர் சக்கரபாணி
அறுபது வருடங்களுக்கு முன்பு தொழிற்பேட்டை உருவானதின் மூலம் தான் பூட்டுக்கு பெயர் போன நகரமாக திண்டுக்கல் பேசப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து நிலக்கோட்டையில் இரண்டாவது தொழிற்பேட்டையை தொடர்ந்து மூன்றாவது தொழிற்பேட்டை கூடிய விரைவில் உருவாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலேயே ஒட்டன்சத்திரம் தொகுதி தான் பெரும்பாலும் விவசாய நிறைந்த பூமியாக இருந்து வருகிறது. அதிலும் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பல பகுதிகள் வானம் பார்த்த பூமியாக படர்ந்து போய் கிடக்கிறது. இப்படிப்பட்ட பகுதிகளில் தொழிற்பேட்டை (சிட்கோ) கொண்டு வந்தால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் அதோடு தொகுதியும் வளர்ச்சி அடையும் என அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்களும் விவசாயிகளும் தொடர்ந்து தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான சக்கரபாணியிடம் வலியுறுத்தி வந்தனர். அதனையேற்று, கொத்தையம் ஊராட்சியில் உள்ள அரளிகுத்து தரிசுநிலத்தில் தொழிற்பேட்டை கொண்டு வருவதற்காக ஏற்பாடுகளை அதிகாரிகள் துணையோடு அமைச்சர் செய்துவந்தார்.
கலெக்டர் பூங்கொடி
இந்நிலையில் இதனை எதிர்த்து, அப்பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் கடந்த 25.9.2023ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் அரளிக்குத்து குளத்தில் தொழிற்பேட்டை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். அதன்மூலம் விவசாயமும் மக்களும் பாதிக்கப்படுவார்கள். அதனால் குளத்தை சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை 12 வாரத்திற்குள் மனுதாரருக்கு பதில் அளிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு 5.10.2023ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
அதனடிப்படையில் ஆர்.டி.ஓ. தாசில்தார், பி.டி.ஓ., பொதுப்பணித்துறை நங்காஞ்சியாறு செயற்பொறியாளர் இப்படி சில துறை அதிகாரிகளிடம் வாங்கிய ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்தபோது கொத்தையம் கிராமம், சர்வே எண்: 906, 907, 908 படி 22.00.50 ஹெக்டேரில் உள்ள 54.35 ஏக்கர் அரளிக்குத்து குளம் இல்லை. அரளிக்குத்து தரிசுநிலம் என உறுதி செய்யப்படுகிறது. அதனால் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று மாவட்ட கலெக்டர் பூங்கொடியும் மனுதாரருக்கு கோர்ட்டு உத்தரவுப்படி பதில் அனுப்பி இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தார்.
அதைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள தொழிற்பேட்டையில் இருக்கும் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மாவட்ட குறு சிறு தொழில்கள் சங்கம் லகு உத்யோக் பாரதி ஆகிய சங்கங்கள் இந்த புதிய தொழிற்பேட்டை தொடங்க வேண்டும் என முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை மனு அனுப்பியது மட்டுமல்லாமல் மாவட்ட கலெக்டர் பூங்கொடியிடமும் நேரில் மனு கொடுத்து கொத்தையத்தில் தொழிற்பேட்டையை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தியும் இருக்கிறார். அப்படியிருக்கும்போது இப்பிரச்சனையை அரசியலாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரளிக்குத்து தரிசுநிலத்தை சுற்றியுள்ள விவசாயிகள் அப்பகுதியில் உள்ள எதிர்க்கட்சியினர் மூலம் இதை அரசியலாக்க தூண்டிவிட்டனர் எனக் கூறப்படுகிறது.
அதனடிப்படையில் தான் பா.ம.க. பொருளாளர் திலகபாமா மற்றும் பிஜேபி நிர்வாகிகள் அந்த இடத்தை பார்வையிட்டு அரசு சிட்கோ அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். தவறினால் அப்பகுதி மக்களை திரட்டி போராட்டத்தில் குதிப்போம் என அறிக்கையும் விட்டு இருக்கிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் டெபாசிட் கூட வாங்க முடியாத திலகபாமா எங்கள் தொகுதியில் அரசியல் பண்ண பார்க்கிறார். இது திமுக கோட்டை ஆறுமுறை எங்க அமைச்சரை தொடர்ந்து வெற்றி பெற வைத்து இருக்கிறோம். அதனால்தான் தற்போது மந்திரியான உடன் இரண்டு கல்லூரிகள், ஐடிஐ, ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் விவசாயிகளுக்காக தொழிற்சாதன கிட்டங்கி, மார்க்கெட் மற்றும் ஆயிரம் கோடியில் தொகுதியில் நிரந்தர காவேரி கூட்டுக் குடிநீர்; திட்டம், இடையகோட்டை பசுமை மரக்கன்றுகள் ஒரே இடத்தில் ஒரு லட்சத்திற்கு மேல் மரக்கன்றுகள் நட்டு மரம்போல் வளர்ந்து இயற்கை சூழ்நிலையே மாற்றி இருக்கிறது.
இப்படி பல திட்டங்களைக் கொண்டு வந்து இருக்கிறார். அதுபோலதான் எங்களின் நீண்ட நாள் கனவான தொழிற்பேட்டையைக் கொண்டுவர இருக்கிறார். அதற்காகத்தான் அரளிக்குத்து புறம்போக்கு நிலத்தை சுற்றியுள்ள விவசாயிகள் எதிர்க்கிறார்களே தவிர பொதுமக்கள் யாரும் எதிர்க்கவில்லை. ஏற்கெனவே இந்த நிலத்தை சுற்றியுள்ள விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது தொழிற்பேட்டை வந்துவிட்டால் அது பறிபோய் விடுமே என்ற நோக்கத்தில் தான் அரசியல்வாதிகளைத் தூண்டிவிட்டு வருகிறார்கள். அது எங்க அமைச்சரிடம் எடுபடாது” என்றார் கொத்தையத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ்.
செல்வராஜ் - பாலசுப்பிரமணி
இது சம்மந்தமாக வெடிக்காரன்வலசையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியடத்திடம் கேட்டபோது, “எங்க தொகுதி விவசாய பூமியாக இருந்தாலும் கூட மழைத்தண்ணீர் இல்லாததால் விவசாயமும் சரிவர இல்லை. நூறு நாள் வேலையை நம்பியும் கூட இருக்க முடியவில்லை. அதனால் படித்த இளைஞர்கள் முதல் பெண்கள் வரை திருப்பூர் கோவை உள்பட வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு போய் வருகிறார்கள். அதனால் தான் இங்கு ஒரு தொழிற்பேட்டை இருந்தால் படித்த இளைஞர்களுக்கும், கூலி வேலை செய்யும் பொதுமக்களுக்கும் நிரந்தர வேலையாக கிடைக்கும். அதனால் தான் தொழிற்பேட்டை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதன்மூலம் இப்பகுதியில் உள்ள மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்த ஒரு பாதிப்பும் வராது. ஏற்கனவே இந்த தரிசுநிலத்தில் அப்பகுதியில் உள்ள மக்களும், விவசாயிகளும் தங்கள் வீடுகளுக்கும், நிலத்திற்கும் மணல்களை மறைமுகமாக எடுத்ததின் மூலம் மேடு பள்ளங்களும் இருக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பலர் இரவு நேரங்களில் மது அருந்துவது மற்றும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த தொழிற்பேட்டை உருவாவதின் மூலம் எங்க பகுதி தான் கூடிய விரைவில் பொருளாதார வளர்ச்சி அடைய போகிறது. அதற்கு அமைச்சர் சக்கரபாணி வழிவகுத்து கொடுத்து இருக்கிறார். அதை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். எப்போதும் நன்றி விசுவாசமாக இருப்போம்” என்று கூறினார்.
தங்கராஜ் - அண்ணாதுரை- மெய்யப்பன் - ஜெயராமன்
இது சம்மந்தமாக திண்டுக்கல் மாவட்ட சிறுதொழில் சங்க நிர்வாகிகளான தங்கராஜ், அண்ணாதுரை, மெய்யப்பன், ஜெயராமன் ஆகியோரிடம் கேட்டபோது, “கொத்தையம் பகுதியில் புதிதாக தொழிற்பேட்டை துவங்குவதின் மூலம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு வராது. அப்பகுதி மக்களுக்கு உதவிகரமாகத்தான் இருக்கும். அப்பகுதியில் உள்ள மக்களும் விவசாயம் சம்மந்தப்பட்ட தொழில் தொடங்கி கொள்ளலாம். இதில் லேத், காய்கறி பதப்படுத்துதல், கண்வலி கிழங்கு பதப்படுத்துதல், முருங்கை பவுடர் தயாரிப்பு, மாம்பழ ஜீஸ் குடோன் மற்றும் விவசாய கருவிகள் செய்யக்கூடிய தொழிற்சாலை, விசைத்தறி, மாட்டுத்தீவனம், கோழித்தீவனம், சேமியா, தறி உள்பட பல குறு சிறு தொழில்கள் தொடங்கலாம்.
இதன்மூலம் ஆயிரம் படித்த இளைஞர்கள் பயனுள்ளதாக இந்த தொழிற்பேட்டை இருக்கும். அப்பகுதியில் படித்த இளைஞர்களும் விவசாயிகளும் சொந்தமாகக் கூட தொழில் ஆரம்பிக்கலாம். இப்படி 55 ஏக்கர் உள்ள இந்த புறம்போக்கு நிலம் மூலம் சுமார் நூறு தொழிற்கூடங்கள் அமைய வாய்ப்பிருக்கிறது. இப்படி சிறு தொழில் ஆரம்பிக்கக்கூடிய இளைஞர்களுக்கு அனைத்து மாவட்ட சங்கங்களும் அனைத்து உதவிகளும் செய்ய தயாராக இருக்கிறது. ஆகவே கூடிய விரைவில் அமைச்சர் சக்கரபாணி இந்த தொழிற்சாலையை அமைத்துத் தருவார் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறோம்” என்றனர் உறுதியாக.