Minister Palanivel Thiagarajan says Tamil Nadu excels in language awareness

தமிழக அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் ‘பன்னாட்டு கணித்தமிழ் 24’ மாநாடு இன்று (08-02-24) சென்னை நந்தம்பாக்கக்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாடு, நாளை (09-02-24), நாளை மறுநாள் (10-02-24) ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.

இன்று நடைபெற்ற ‘பன்னாட்டு கணித்தமிழ் 24’ மாநாட்டில் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “மொழி உணர்வில் எப்போதுமே தமிழ்நாடு சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மொழியின் பங்கு முக்கியமானதாக இருக்கும். கணித்தமிழ் வளர்ச்சியில் கலைஞர்ஒரு பெரும் முன்னெடுப்பைச் செய்தவர்.

கணித்தமிழுக்கு தேவையான தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதில் கலைஞர் தனி அக்கறை காட்டினார். செயற்கை நுண்ணறிவு ஒரு மாபெரும் புரட்சிக்கும், பெரும் பாய்ச்சலுக்கும் தன்னை தயார்படுத்தி வருகிறது. எதிர்காலத்துக்கு தேவையான பெரும் தமிழ் தரவுகளைத்திரட்டுவது குறித்து நாம் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். வரும் காலம் தரவுகளின் காலம் என்பதால் எவ்வளவு தரவுகள் உள்ளதோ அந்த அளவுக்கு மொழி முன்வரிசைக்கு செல்லும்” என்று தெரிவித்துள்ளார்.