சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து கீழ வன்னியூரில் உள்ள காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று(25.1.2025) மதியம் தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் புதிய பேருந்து சேவையைத் துவங்கி வைத்தார். அதன்படி கீழ வன்னியூர் கல்லூரி வழியாக காட்டுமன்னார்கோவில் சென்று வரவும், அதே போல் காட்டுமன்னார்கோவிலில் இருந்து கல்லூரி வழியாக சிதம்பரத்திற்கு வந்து செல்லும் வகையில் பேருந்து சேவையைத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தின் மண்டல மேலாளர் ராகவன், நகர் மன்ற தலைவர் செந்தில்குமார் துணைத்தலைவர் முத்துக்குமரன் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் எனக் கலந்து கொண்டனர்.
இந்தபேருந்து சேவை சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து ஜனவரி 24ஆம் தேதி காலை 9:30 மணிக்குத் தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று காலை 11 மணி வரை அமைச்சர் வராததால், பேருந்து சேவை துவக்கி வைக்கும் நேரம் மாற்றப்பட்டு, ஜனவரி 25(இன்று)ஆம் தேதி மதியம் அமைச்சர் பேருந்து சேவையை துவக்கி வைக்கப்பட்டது. நேற்று பேருந்து சேவை துவக்கி வைக்கும் நாள் என்பதால் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் 2 மணி நேரம் காத்திருந்தனர். ஆனால், அமைச்சர் வராததால் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மதியம் 1 மணி அளவில் பேருந்து துவக்கி வைக்கும் வரை பேருந்து நிலையத்திலேயே 60-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்து துவக்கி வைக்கப்பட்ட பேருந்தில் மதியம் கல்லூரிக்கு சென்றனர்.