தமிழகத்தில் டெக்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பதிலளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 5,000-த்தைக் கடந்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன.
குறிப்பாக, இன்றைய நாளிதழ்களில் சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதாகவும், அதில் குழந்தைகள், முதியவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெறுவதற்கு வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. ‘நோய் நாடி, நோய்முதல் நாடி....’என்ற வள்ளுவர் அறிவுரைக்கேற்ப, மழைக்காலம் நெருங்குவதால் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா போன்ற விஷக் காய்ச்சல்கள் அதிகமாக பரவி உள்ளதால், தமிழ் நாடு முழுவதும் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் இணைந்து, மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று வீடுகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுத்தல்; காய்ச்சல் முகாம்கள் நடத்துதல்; தொடர்ந்து கொசு மருந்து அடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அப்பாவி மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், “டெங்கு எங்கே இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமியை காட்டச் சொல்லுங்கள். கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த போது 66 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தனர். அதேபோல் 2017 ஆம் ஆண்டு 65 பேரும் உயிரிழந்தனர். ஆனால் இந்தாண்டு இதுவரை டெங்கு காய்ச்சலால் 6பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் டெங்கு இல்லை; யாரும் பதட்டப்பட வேண்டாம்” எனத் தெரிவித்திருக்கிறார்.