காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை அந்தந்த தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் தொடங்கி வைக்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்துக் கட்சிகள் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த அடிப்படையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு அரசுப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மா. சுப்பிரமணியன் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அவருடன் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சென்னை மாநகர துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.