Skip to main content

“உதயநிதி விஷயத்தில் முதல்வரின் அறிவிப்புக்கு கட்டுப்படுவோம்” - அமைச்சர் கே.என். நேரு

Published on 30/11/2022 | Edited on 01/12/2022

 

minister kn nehru talk about udhayanidhi stalin

 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் ரெட்டிமாங்குடி ஊராட்சியில் லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியங்களைச் சேர்ந்த 109 ஊரக குடியிருப்புகளுக்குக் கொள்ளிடம் ஆற்றிலிருந்து குடிநீர் வழங்கும் வகையில் ரூபாய் 248.59 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அத்துடன் பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 36.84 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என். நேரு, “உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவதற்கு நாங்கள் யாரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதை முடிவு செய்ய வேண்டியது தமிழக முதல்வர்தான். அவர் அறிவிப்பதற்கு நாங்கள் கட்டுப்படப் போகிறோம் என்று கூறினார். மேலும் தொடர்ந்து தமிழக அரசு ஏற்றக்கூடிய பல்வேறு சட்ட விளக்கம், அறிவிக்கக்கூடிய திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பொதுமக்களே பலர் அந்த விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

 

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை உய்யக்கொண்டான் ஆற்றை சீரமைப்பதற்கு சட்டமன்றத்தில் 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகரப் பகுதிக்குள் சுமார் 7 கிலோ மீட்டர் அளவில் எந்தவித கழிவு நீரும் கலக்காமல் தண்ணீர் தூய்மையாகச் செல்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும். அதேபோல் கோரையாற்றின் கரையில் 40 அடி அகலம் உள்ள சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு அந்த சாலை பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து முடிவடையும் வகையில் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பணிகளும் நிறைவடையும் என்று கூறினார். 

 

மேலும் முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் முழுமையான குடிநீர் சென்றடைவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஏற்கனவே முசிறி தொகுதிக்கு தமிழக முதல்வர் குடிநீர் வழங்குவதற்கான பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் விரைவில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

 

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் முரளி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.

Next Story

“ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது” - உதயநிதி குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Udhayanidhi alleges Central govt is looting through GST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து இன்று (ஏப்.16) காலை பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி. அப்போது அவர் பேசியதாவது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்கத் தவறிய மக்களும் பெருமைப்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணிபுரிந்து வருகிறார்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார் ஸ்டாலின். ஆனால், பழனிசாமியை நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டார். நீட் தேர்வுக்கு போராட்டம் பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்து விட்டார். நீட் தேர்வினால், இதுவரை 21 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கரோனா காலத்தில், பி.எம்.கேர் என்ற பெயரில், வசூலிக்கப்பட்ட ரூ.32 ஆயிரம் கோடிக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் கரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயண சலுகையை, ஈரோடு மாவட்டத்தில் 21 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் 11 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். காலை உணவுத் திட்டத்தில், 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 4 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை, ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அறச்சலூர் மலை கோயிலுக்கு செல்ல பாதை வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசு சாதனை. கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை. ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது.

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர். தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். கடந்த தேர்தலில் அடிமை அதிமுக வை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி- அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இருக்கும் படம், செங்கல், 29 பைசா பதாகை போன்றவற்றை காட்டி அதுகுறித்து விளக்கம் அளித்தார்.