சென்னை ராயபுரம் மண்டலத்தில் கரோனா தொற்றால் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ள நிலையில் ராயபுரம் தொகுதி எம்எல்ஏவும், மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வட்டார துணை ஆணையாளர் ஆகாஷ் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மார்ச் 21 முதல் இன்று வரை நடைபெற்று வரும் கரோனா போராட்டத்தில் நாம் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளோம். அரசு பல்வேறு வகைகளான மாநகராட்சி அதிகாரிகளுடனான கூட்டங்களை நடத்தி கரோனா பரவலை தடுத்து வருகிறது.
மக்களின் முழுமையான ஒத்துழைப்பால் மட்டுமே நாம் 3 வது கட்டத்திற்கு செல்லாமல் இருக்க முடியும். இதற்கு சமூக விலகல் மிக முக்கியம். சென்னையில் இதுவரை வீடுகளில் 12400 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 150 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்திருந்தனர். தற்போது மேலும் 100 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 67 பகுதிகள் தனிமை பகுதிகளாக முடக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இதுவரை 10 ஆயிரம் தன்னார்வலர்கள் புள்ளி விவரங்களை சேகரிக்க ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு சேமித்து வைக்கப்படும். சமூக பரவலை தடுக்க இந்த புள்ளி விவரம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். தற்போது நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு வட்டம் வாரியாக கிருமி நாசினி தெளிப்பது, சமூக விலகல் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
சென்னையில் உள்ள மண்டலங்களில் ராயபுரம் மண்டலம் பெரிய மண்டலமாகும். இந்த மண்டலத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ராயபுரத்திரல் - 8, துறைமுகம் - 16, சேப்பாக்கம் - 11எழும்பூர் - 8 என கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காசிமேட்டில் தங்கியுள்ள ஆந்திர மீனவர்களிடம் ஏற்கனவே பேச்சு வார்த்தை நடத்தி உள்ளோம். அவர்களுக்கு தேவையான வசதிகள் சென்னை மாநகராட்சி மூலம் செய்யப்பட்டு வருகிறது. மீனவர் நல வாரியத்திற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக முதல்வரின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. விரைவில் மீனவர் நல வாரியத்திற்கு நிதி ஒதுக்கப்படும்.
எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதில் தவறேதும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிதியே இல்லாமல் எம்பிக்கள் மக்கள் பணியாற்றினார்கள். மீன்பிடி தடைக்காலத்தை எதிர்கொள்வது குறித்து மத்திய அரசிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மத்திய மற்றும் அனைத்து மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் தடைக்காலம் குறித்து முடிவுகள் எடுக்கப்படும்" என தெரிவித்தார்.