/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/9_100.jpg)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் சார்பில் செவ்வாய்கிழமை(6.8.2024) பல்வேறு வழித்தடங்களில் 17 புதிய பேருந்துகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் போக்குவரத்தின் அத்தியாவசியத்தினை புரிந்துகொண்டு சமூக பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் சிறப்பான பங்களிப்பினை உயர்த்தும் முயற்சியில் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்திற்கு 2023-24 ம் ஆண்டிற்கான புதிய பேருந்துகளாக 307 புறநகர பேருந்துகளும், 64 நகரப் பேருந்துகளும் என மொத்தம் 371 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக இதுவரை 184 புறநகர பேருந்துகள் மற்றும் 28 நகரப் பேருந்துகள் தடத்தில் இயக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்நிகழ்ச்சியின் வாயிலாகக் கடலூர் - பண்ருட்டி(வழி- நெல்லிக்குப்பம்), சிதம்பரம் - பரங்கிப்பேட்டை(வழி- புவனகிரி, பி.முட்லூர்), குறிஞ்சிப்பாடி - பண்ருட்டி (வழி-வடலூர், காடாம்புலியூர்), விருத்தாசலம் - சேத்தியாத்தோப்பு(வழி-கம்மாபுரம்), விருத்தாசலம் - பாளையங்கோட்டை(வழி-கருவேப்பிலங்குறிச்சி, ஸ்ரீமுஷ்ணம்) ஆகிய 5 புதிய மகளிர் பயண நகரப் பேருந்துகள் மற்றும் கடலூர் - பெங்களூர்(வழி-திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி), வடலூர் - நெய்வேலி டவுன்ஷிப் - பெங்களூர்(வழி- திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி) நெய்வேலி டவுன்ஷிப் - பெங்களூர்(வழி- திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி), விருத்தாசலம் - பெங்களூர்(வழி - திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி), திட்டக்குடி- பெங்களூர்(வழி- சேலம், கிருஷ்ணகிரி), திட்டக்குடி- பெங்களூர்(வழி-திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி), கடலூர் - திருப்பதி(வழி-திருவண்ணாமலை,வேலூர்,சித்தூர்) ஆகிய 12 புதிய புறநகர பேருந்துகள் என மொத்தம் ரூ.6 கோடியே 56லட்சம் செலவில் மொத்தம் 17 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்காகத் துவக்கிவைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாகக் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை நகராட்சிக்குட்பட்ட மின் நகர்ப் பகுதியில் அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவருடன் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி, சிதம்பரம் நகர்மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், நகர் மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன் என உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)