
கல்வி தான் ஒரு குடும்பத்தையும், சமுதாயத்தையும் முன்னேற்றம் அடையச்செய்யும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியுள்ளார், அதோடு வரும் 2026ம் தேர்தல் வரை திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தினசரி சந்திக்கும் ஒவ்வொரு பொதுமக்களிடமும் திமுகவின் சாதனை திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம் மகள் இந்துமதி - அசோக் திருமண வரவேற்பு விழா திண்டுக்கல் பாறைப்பட்டி தனியார் திருமணம் மஹாலில் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அது போல் கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில் குமார் இந்த திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “கட்சி நிர்வாகிகளின் இல்ல விழாக்களுக்குச் செல்லும் போது மனதில் ஒரு வித மகிழ்ச்சி ஏற்படும். காரணம் கட்சியின் மீது பற்றும், கட்சித் தலைவர் மீது பற்றும் கொண்டு என்னுடன் 40 ஆண்டுகளுக்கு மேலாகக் கட்சியின் (திமுக) இருந்து வருபவர் முருகானந்தம். அவரது இல்ல விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். மணமக்கள் இருவரும் பொறியாளராக உள்ளனர். நீங்கள் உங்கள் குழந்தைகளைச் சிறந்த முறையில் கல்வி கற்றுத் தந்து நன்கு வளர்க்க வேண்டும். காரணம் கல்வி தான் ஒரு குடும்பத்தையும், ஒரு சமுதாயத்தையும் முன்னேற்றமடையச் செய்யும்.
முன்னாள் முதல்வர் கலைஞர் நமக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்து செயல்பட்டு மண்ணை விட்டுப் பிரிந்தாலும், நம் இதயங்களில் குடிகொண்டிருக்கும் ஒப்பற்ற தலைவர் கலைஞர் எப்படி திருமண விழா மற்றும் இதர விழாக்களைக் கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தினாரோ அதுபோல கட்சியினரின் இல்ல விழாக்களுக்குச் செல்லும் போது நாம் சந்திக்கும் பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் திராவிட மாடல் ஆட்சி நாயகர், முதல்வர் மு.க. ஸ்டாலினின் சாதனை திட்டங்களையும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சிறப்புமிகு திட்டங்களையும் எடுத்துரைக்க வேண்டும். அது போல் வரும் 2026-ம் சட்டமன்ற தேர்தல் வரை ஒவ்வொரு திமுக தொண்டனும் தினசரி சந்திக்கும் பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனை திட்டங்களை எடுத்துரைத்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி 200 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறலாம் ”என்று கூறினார்.

இந்த விழாவில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி மற்றும் மாநகர மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா. மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன் பிலால். மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி. ஆத்தூர் நடராஜன். பொதுக்குழு உறுப்பினர் அக்பர். மாவட்ட விவசாய அமைப்பாளர் இலா.கண்ணன். திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ் செழியன் வெள்ளி மலை. மாநகரப் பகுதி செயலாளர்களான ராஜேந்திர குமார் ஜானகி.அக்கு. மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ். அகரம் பேரூராட்சி தலைவர் மணி உள்படக் கட்சிப் பொறுப்பாளர்கள் பெருந் திரளாகக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.