Minister Genji Masthan turned tea master

திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான், அவ்வப்போது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வழியில் உள்ள டீக்கடைக்கு சென்று அமர்ந்து டீ குடிப்பதோடு, அந்த கடையில் டீ மாஸ்டராக மாறி அவரே டீ போட்டு அங்கு வருபவர்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் கொடுப்பதை செய்து வருகிறார். அதே மாதிரி சில மாதங்களுக்கு முன்பு தொகுதியில் விசிட் செய்த அமைச்சர் மஸ்தான் அனந்தபுரம் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக மாறி டீ போட்டுக் கொடுத்து அசத்தினார்.

Advertisment

நேற்று திண்டிவனம் அருகில் உள்ள பட்டணம் கிராமத்தில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு கலந்து கொள்ள சென்ற அமைச்சர் மஸ்தான், திண்டிவனம் வழியாக வரும்போது சந்தை மேடு பகுதியில் திமுகவினர் பலர் பொதுமக்களுடன் நின்று கொண்டிருந்தனர். அந்த இடத்தில் காரை நிறுத்தச் சொல்லி இறங்கிய அமைச்சர் அங்கிருந்த டீக்கடையில் உள்ளே சென்று டீ மாஸ்டராக மாறி கடை உரிமையாளர் உட்பட கட்சியினருக்கும் டீ போட்டுக் கொடுத்ததோடு கடைக்கு டீ குடிக்க வந்தவர்களுக்கும் டீ போட்டுக் கொடுத்து அசத்தினார். ஒருமுறை ஓட்டல் ஒன்றுக்குச் சென்றவர் அங்கு பரோட்டா தயார் செய்து சாப்பிட வந்தவர்களுக்கு கொடுத்துள்ளார்.

Advertisment

அமைச்சரின் இந்த செயல்பாடுகள் குறித்து அப்பகுதி திமுகவினர் கூறுகையில், “அமைச்சர் மஸ்தான், ஆரம்ப காலங்களில் செஞ்சி பஸ் நிலையத்தில் சொந்தமாக டீ, பரோட்டா கடை வைத்து நடத்தினார். அதை என்றும் மறக்காமல் எம்.எல்.ஏ, அமைச்சர் என்று அந்தஸ்தில் உயர்ந்த பிறகும்கூட பழைய வாழ்க்கையை மறக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அதை நினைவுபடுத்தும் வகையில் தற்போதும் தொகுதியில் சுற்றுப்பயணம் வரும்போது அவ்வப்போது இதுபோன்று செயல்படுகிறார்” என்கிறார்கள்.