நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் சுங்க கட்டணமானது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இந்த கட்டணம் உயர்த்தப்படும். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. இருப்பினும் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, ஓமலூர் மற்றும் சமயபுரம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் சுங்கச்சாவடிகள் குறித்துப் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள பரனூர், கிருஷ்ணகிரி, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை ஆகிய 4 சுங்கச்சாவடிகள் காலாவதியாகிவிட்டன.
இவ்வாறு காலாவதியான சுங்கச்சாவடிகளில் தொடர்ந்து வழக்கமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது போன்று கட்டணம் வசூலிக்கக்கூடாது. பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். இந்த 4 சுங்கச்சாவடிகளையும் அகற்றக் கோரி மத்திய அரசுக்குத் தொடர்ந்து கடிதம் எழுதியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.