Skip to main content

“என் கல்லறையில் கோபாலபுரத்து விசுவாசி என எழுதுங்கள்” - அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

 

Minister Duraimurugan's emotional speech in assembly

 

தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

 

அதன் காரணமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர், “என்னை பொறுத்தவரையில் நீண்ட நெடுங்காலம் எங்கள் கட்சியில் இருந்தவன் நான். இன்னும் இருக்கப் போகிறவன். என்றைக்காவது ஒருநாள் மறையப் போகிறவன். மறைந்துவிட்ட அன்றைக்கு எனக்கென்று எடுக்கிற சமாதியில், ‘கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என்று ஒரு வரி எழுதினால் போதும். என் தலைவர் கலைஞரின் கோபாலபுரத்து விசுவாசியாக வாழ்ந்தேன். இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், “இன்னும் நூறு ஆண்டுகள் கடந்து வாழ்வீர்கள்” என்றார். 

 

தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “நிச்சயமாக, சண்டை போட்ட பிறகு கவர்னர் டீக்கு அழைத்திருந்தார். நானும் தலைவரும் (மு.க.ஸ்டாலின்) சென்றோம். அப்போது என் வயதைப் பற்றி கேட்டார். அதற்கு முதல்வர், ‘எங்க அப்பாவுடன் 53 வருடங்களுக்கு மேலாக இருந்தவர். இப்போ என்னுடன் இருக்கிறார்’ என்றார். அந்தப் பக்கத்தில் உதயா இருந்தார். “அவருடனும் இருக்கிறார்” என்றார் கவர்னர். உடனே நான், உதயாவுக்கு ஒரு பையன் இருக்கிறான் அவனுடனும் நான்தான் இருப்பேன் என்றேன். அப்போது உங்க வயசு என்ன என்றார் கவர்னர். நான் 80களில் இருக்கிறேன். ஆனால், நிச்சயம் 100-ஐ கடப்பேன் என்றேன். 

 

இதனையும் சொல்லிக் கொடுத்தது எங்கள் தலைவர் கலைஞர் தான். “என்னைக்குமே தனக்கு வயசு ஆயிடுச்சுன்னு நினைக்கவே கூடாது; எப்பவும் இளமைனே நினைக்கணும்” அப்படின்னு சொல்வாரு கலைஞர். அதனால் 100 வயது வரை நிச்சயம் இருப்பேன் கவலைப்படாதீர்கள்” என்றார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !