பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், நேற்று முன்தினம் (09.10.2023) கூடியது. அப்போது காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது 16 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கர்நாடகாவில் மழை குறைவாகப் பெய்துள்ளதால் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளதால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க இயலாத சூழல் இருப்பதாகக் கர்நாடக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதனையடுத்து அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை என தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் 16 நாட்களுக்கு நீர் திறக்கக் கர்நாடகாவுக்கு உத்தரவிடக் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.
அதேநேரம் நாளை டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் கூட இருக்கிறது. இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ''நாளைக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் 16,000 கன அடி நீர் தர வேண்டுமென நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். தொடர்ந்து இப்படி போராடிக் கொண்டுதான் இருப்போம். ஆனால் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும், காவிரி மேலாண்மை ஆணையமும் சொன்னதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை கடைபிடிக்கிறார்கள்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'நேற்று டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் கடையடைப்பில் ஈடுபட்டனர் அந்த விவசாயிகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்' என்று கேள்விக்கு, 'அவர்களுடைய உணர்வை நான் பாராட்டுகிறேன்' அப்படி ஒரு உணர்வு இருக்க வேண்டும்' என்றார்.