Skip to main content

அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்!

Published on 25/07/2024 | Edited on 25/07/2024
Minister Durai Murugan travels to Delhi! 

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி (31.07.2024) வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதைக் கர்நாடக அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

Minister Durai Murugan travels to Delhi! 

இத்தகைய சூழலில் தான் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32வது கூட்டம் நேற்று (24.07.2024) பிற்பகல் 02.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில்  தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஆகஸ்ட் மாதத்துக்கான 45 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்துக்கான தண்ணீர் திறப்பது குறித்து ஜூலை 30ல் காவிரி ஒழுங்காற்றுக் குழு மீண்டும் கூடுகிறது என ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 45 டிஎம்சி நீர் திறப்பது குறித்து ஜூலை 30ல் முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Minister Durai Murugan travels to Delhi! 

இந்நிலையில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திப்பதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இதற்காக இன்று (25.07.2024) காலை 08.40 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்தச் சந்திப்பின் போது காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலுடன் விரிவாக பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்