தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். ஒரு புறம் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சியினருக்கு ஆதரவு கேட்டு வாக்குச் சேகரித்து வந்தால், மறுபுறம் அந்தந்தத் தொகுதி வேட்பாளர்கள் வாக்குச் சேகரித்துவருகின்றனர்.
இப்படி நேற்று திண்டுக்கல் சீனிவாசன், தன் தொகுதியான திண்டுக்கல்லில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். “உங்க புருஷன் வெளியூர் போய்ட்டா கவலைப்படாதீங்க; நாங்க இருக்கோம்..”, “ஒரு சிலிண்டரின் விலை ரூ. 4,500” எனத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் உளறியது சமீபத்திய ட்ரெண்ட். அதன்படி நேற்று, திண்டுக்கல் தொகுதி, ரவுண்ட் ரோடு புதூர், குள்ளனம் பட்டி உள்ளிட்ட இடங்களில் வாக்குச் சேகரித்துவந்தார். அப்போது, ஒய்.எம்.ஆர். பட்டி பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, பொதுமக்கள் மத்தியில், “நமது துணை முதல்வர் ஓ.பழனிசாமி” என ஓ.பன்னீர்செல்வத்தை, ஓ.பழனிசாமியாக மாற்றி உச்சரித்தார். இதனால், அங்கிருந்த அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் குழம்பிப்போனர்.