கடலூர் மாவட்டம், திட்டகுடி சட்டமன்ற உறுப்பினரும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சி.வி. கணேசனின் மனைவி பவானி அம்மாளுக்கு நேற்று காலை உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதனால், உடனடியாக அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது இறப்பு திமுகவினர் மத்தியிலும், தொகுதி மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
அமைச்சரின் மனைவி பவானி அம்மாள் இறப்பு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அமைச்சர் கணேசனின் துணைவியார் பவானி அம்மாள் திடீரென மறைவு எய்திய செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்; மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.
பவானி அம்மாளின் உடல் நேற்று காலை 11 மணி முதல் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக அமைச்சர் வசித்துவரும் விருத்தாசலம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொன்முடி, அன்பில் மகேஷ், செஞ்சி மஸ்தான், ரகுபதி, கயல்விழி, மா. சுப்பிரமணியன் உட்பட பல்வேறு அமைச்சர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் எம்.எல்.ஏ. வேல்முருகன் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் நெய்வேலி சபா. ராஜேந்திரன், கடலூர் ஐயப்பன், விருத்தாசலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், பண்ருட்டி ஒன்றிய குழுத்தலைவர் பாலமுருகன், மங்களூர் ஒன்றியக்குழு தலைவர் சுகுணா சங்கர், விருத்தாசலம் நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கோட்டேரி சுரேஷ் உட்பட திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுநல இயக்கத்தினர், பொதுமக்கள் பவானி அம்மாள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
பவானி அம்மாளின் உடல் இன்று காலை 11 மணி அளவில் விருத்தாசலத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து, சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே கழுதூர் பகுதியில் உள்ள அமைச்சருக்கு சொந்தமான கல்வி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.