தமிழ்நாடு முழுக்க கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் கிராமங்களில் நடப்பது போல் நகர சபை கூட்டத்தை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட ஏ.பி.பி. நகரில் நகர சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற துணைத் தலைவர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். ஒட்டன்சத்திரம் நகரிலுள்ள திடீர் நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனைப் பட்டா இல்லாமல் வசித்து வரும் 85 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைவேலப்பர் கோவில் அருகே நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள், ஒட்டன் சத்திரம் நகரில் மூன்று இடங்களில் தலா 10 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்படும். நகரில் திறந்தவெளி சாக்கடைகளை ஒழிக்கும் பொருட்டு பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ரேஷன் கடைகள் அனைத்தும் நவீனப்படுத்தப்படும். நகரின் அனைத்து பகுதிகளிலும் நவீனமயமாக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மரிச்சிலம்பு பகுதியில் ரூ.200 கோடி செலவில் புதிய மின் திட்டம் அமைக்கப்படும். ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் சுமார் ரூ.26 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீனமயமாக்கப்பட்ட 126 கடைகள் அமைக்கப்படும். சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.