Skip to main content

விபத்தில் மூளைச் சாவு அடைந்த 13 வயது சிறுவன்; கண்ணீர் விட்டு அழுத அமைச்சர்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

minister burst into tears after seeing a 13-year-old boy who passed away

 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருள் பரிமளா ஆகிய தம்பதியர்களின் இரண்டாவது மகன் 13 வயதான ராகவேந்திரா. கடந்த 18ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

 

இந்நிலையில், நவம்பர் 29 ஆம் தேதி  மருத்துவமனையில் ராகவேந்திரா மூளைச் சாவு அடைந்தார். கண்ணீர் விட்டு கதறினர் பெற்றோர். அந்த துயர நிலையில் ராகவேந்திராவின் பெற்றோர்கள் தாமாகவே முன்வந்து ராகவேந்திராவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்து மருத்துவர்களிடம் தெரிவித்தனர். என் மகனால் சிலருக்கு வாழ்வு கிடைக்கட்டும் என்றனர். 

 

அதனைத்தொடர்ந்து விதிகள் படி உறுப்பு தானம் செய்யப்பட்டது. அதன்பின் ராகவேந்திராவின் உடல் இன்று இறுதி நல்லடக்கம் செய்வதற்காக சர்வந்தாங்கல் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராகவேந்திராவின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து தமிழக அரசின் ஆணையின்படி, சிறுவனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

இந்த நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர் காந்தி, மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் ஆகியோர் பங்கேற்று மலர் வளையம் வைத்து அரசு மரியாதையினை செலுத்தினர். உடல் உறுப்பு தானம் செய்த ராகவேந்திராவின் பெற்றோர்களிடம் அமைச்சர் ஆர் காந்தி ஆறுதல் தெரிவித்ததோடு உடல் உறுப்பு தானம் செய்த அவர்களின் செயல்களை கண்டு இரு கரங்கள் கூப்பி தலை வணங்கி கண்ணீர் விட்டு அவர்களின் செயலை வெகுவாக பாராட்டினார். மகனின் உடல் உறுப்பு தானம் செய்த பெற்றோரிடம் அமைச்சர் கையெடுத்து கும்பிட்டு தலைவணங்கி கண்ணீர் விட்டு பாராட்டிய சம்பவம் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அனைவரின் மத்தியிலும் ஆழ்ந்த சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆறு இடங்களில் சாமி தரிசனம் செய்ய ரோப்கார்” - அமைச்சர் சேகர்பாபு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Minister Sekar Babu says should have darshan of Swami at six places

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அமைந்துள்ள 108 திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் 20 கோடி மதிப்பீட்டில் முடிவுற்று திறக்கும் தருவாயில் உள்ள ரோப்கார் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநில கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து ரோப் கார் வெள்ளோட்டத்தில் பயணம் செய்து மலை மேல் உள்ள லட்சுமி நரசிம்மரை சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “லட்சுமி நரசிம்மர் கோவில் இன்றைக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் விமான நிலையத்தில் உள்ள அமைப்புகளை போன்று மின் தூக்கி வசதி, உட்கட்டமைப்பு வசதிகளின் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. இன்னும் சிறு சிறு பணிகளில் குறைகள் உள்ளது. அவை முழுமையாக முடிக்கப்பட்டு தமிழக முதல்வரால், ரோப்கார் பணி விரைவில் பக்தர்களுக்கு அர்ப்பணிக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் இக்கோவிலில் அரசியல் ஆதாயத்திற்காக இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய பழனிசாமி பணிகள் முடிக்கப்படாமலேயே திறந்து வைத்து கல்வெட்டு வைத்தனர் என விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில் மேலும் ஆறு திருக்கோவில்களில் ரோப்கார் அமைக்க சாத்தியக் கூறுகள் உள்ளதாக ஆராயப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இரண்டு இடங்களில் ரோப்கார் பணி துவங்க 27 கோடி தமிழக முதல்வர் ஒதுக்கி இருப்பதாகவும் விரைவில் அப்பணி துவங்கும் என தெரிவித்தார்.

திருத்தணி முருகன் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு சாமி தரிசனம் எப்போது நினைத்தாலும் இறைதரிசனத்தை மேற்கொள்ளலாம். ஆனால் அரசியலுக்காக துறையின் மீதும், அரசின் மீதும் எந்தவித குற்றங்களை சுமத்த முடியாத காரணத்தால், இது போன்று சிறு சிறு பிரச்சனைகளைக் கூட ஊடகங்களில் பேசி பெரிதாக்கி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையினுடைய கருத்துக்கு பதில் அளித்தார்.

Next Story

கலை சங்கமம் நிகழ்ச்சி; பறை இசைத்து தொடங்கிய மாவட்ட ஆட்சியர்!

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
District Collector started the Kalai Sangam program by beating the drum

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் தமிழ்நாடு கலை பண்பாட்டு இயக்கம் மற்றும் இயல், இசை நாடகம் மன்றம் சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழர் திருநாள் பொங்கல் விழாவை கொண்டாடும் கலைச் சங்கமம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை போற்றும் வகையில் நலிந்த பாரம்பரிய கலையை முன்னேற்றம் அடையச் செய்யும் வகையில் பறையாட்டம், கரகாட்டம், நையாண்டி மேளம், கொக்கலிக்கட்டை, புலியாட்டம், வாளி மோட்சம், இசை நாடகம் உள்ளிட்ட பலவேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சியர் வளர்மதி பறை இசைத்து துவக்கி வைத்தார். குறிப்பாக நாடக கலைஞர்கள் மூலம் பொது மக்களுக்கு  விழிப்புணர்வு செய்யும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியைக் கண்டு களிக்க ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொய்க்கால் ஆட்டம் ஆடுபவர்களிடம் ஆட்சித் தலைவர் வளர்மதி நாங்கள் உண்மையான கால்களிலேயே சிறிது நேரம் கூட நிற்கவும் நடக்கவும் முடியவில்லை. இதனை கட்டிக் கொண்டு ஆடுகிறீர்களே உங்களுக்கு இது ஏதுவாக உள்ளதா பின்னர் நீங்கள் ஆடும் பொழுது உங்கள் கால்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்படுகிறதா என்பதை கேட்டறிந்தார்.