Skip to main content

"மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு என்பது தவறான தகவல்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

minister anbil mahesh poyyamozhi surprise visit in kulithalai school 

 

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 

அப்போது வட்டாரக் கல்வி அலுவலகத்தில் அலுவலகப் பணியாளர்களின் வருகைப்பதிவேடு, வட்டாரக் கல்வி அலுவலர் தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தது குறித்த விவரங்கள், தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து பள்ளிகளிலும் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா? ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் மற்றும் ‘இல்லம் தேடி கல்வி’ ஆகிய திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்பட்டு மாணவர்களின் கல்வித்தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறதா? என்பன குறித்தும், மாணவர்களின் கற்கும் திறன், வருகைப்பதிவு, இடைநிற்றல் ஆகியன குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் உடனிருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து  135 ஆண்டுகள் பழமை வாய்ந்த  குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவர்களிடம் ஆசிரியரின் கற்பித்தல் குறித்தும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக உள்ளார்களா, பள்ளி அடிப்படை வசதி குறித்தும், கட்டடங்களின் தன்மையைக் குறித்தும் கேட்டறிந்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பெயர்கள் அடங்கிய நினைவுத்தூணினை நேரில் பார்வையிட்டார்.

 

அதைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “தமிழக பள்ளிக்கல்வித் துறையானது மிகப்பெரிய துறையாகும். இந்த துறையின் அமைச்சராகிய நான் பள்ளிகளில் 77 விதமான ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.  அரசு பள்ளிகள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மட்டுமல்லாமல் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆகியவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளலாம். குளித்தலை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் வருகைப்பதிவேடு மற்றும் அவர்களின் ஆய்வுப்பணிகள் குறித்தும் கேட்டறிந்தேன். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

 

தமிழக முதல்வர் துவக்கி வைத்த எண்ணும் எழுத்தும் திட்டத்தினை நானும் துறைசார்ந்த அதிகாரிகளும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மாணவர்கள் அடிப்படை தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களை சரியான முறையில் கற்று, அறிவு நிறைந்த சமுதாயமாக இருக்க வேண்டுமென தமிழக முதல்வரின் கனவை நினைவாக்கும் வகையில் அதிகாரிகள் தங்களது அர்ப்பணிப்பான உழைப்பினை வழங்கி வருகின்றனர். எண்ணும் எழுத்தும் திட்டத்தினை அரசின் கண்ணும் கருத்தும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

 

நான் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு கூட்டத்தொடரிலோ ஒவ்வொரு எம்எல்ஏக்கும் எனது ஆய்வறிக்கையினை அளிக்க உள்ளேன். இதுவரை 34 தொகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். தற்போது 35வது தொகுதியாக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முதன்முதலில் வெற்றி பெற்ற குளித்தலை தொகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்எல்ஏக்களின் அனுமதியுடன் தான் அந்த தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

 

அரசியல் பாகுபாடு பார்க்கக்கூடாத இந்த துறையில் மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக்கொண்டு எதிர்காலத்தில் அவர்கள் திறன்மிக்கவர்களாக, அறிவு நிறைந்த சமுதாயமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு என்பது தவறான தகவல். அரசுப் பள்ளிகளில் உரிய வயதுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களிடையே கூட்டங்கள் மற்றும் நாடகங்கள், கருத்தரங்குகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்