Skip to main content

"இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 எப்போது..?" - அமைச்சர் சொன்ன தகவல்

 

minister about Rs.1000 per month for housewives scheme

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் சின்னாளபட்டியில் தி.மு.க. சார்பாக தமிழக முதல்வரின் ஓயாத உழைப்பில் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. 

 

இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார். ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலை வருமான சிவகுருசாமி, ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர்.ராமன், ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் கழகதுணைப் பொதுச் செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி. தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் ப.செல்வேந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

 

இந்த  கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, "கடந்த ஓராண்டு கால ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள்  உடனே தீர்த்து வைக்கப்படும். வேலைவாய்ப்பைப் பொருத்தவரை பாகுபாடு இன்றி வேலைவாய்ப்பு வழங்கப்படும். கூட்டுறவுத் துறை சார்பாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், கடன் தள்ளுபடி  உட்பட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இனி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது தான் என்னுடைய முதல் வேலை என்றார். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் விரைவில் தொடங்கப்படும். 

 

இதுபோல சின்னாளபட்டி பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படும் அதோடு சின்னாளபட்டி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மின்மயானம் விரைவில் அமைய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பயன்பெறுவதோடு, அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பொது மக்களும் பயன்பெறுவார்கள். கடந்த திமுக ஆட்சியின்போது 7,000 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுபோல, இம்முறையும் சுமார் 5000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆத்தூர் தொகுதி சின்னாளபட்டியில் சுங்குடி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைக் காக்க ரூ.5 கோடி மதிப்பில் சாயக் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைத்தல், அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட உலகம்பட்டியில் ரூ.8 கோடி மதிப்பில் தடுப்பணை, தாடிக்கொம்பு ஊராட்சிக்கு உட்பட ஆத்துப்பட்டியில் ரூ.8 கோடி மதிப்பில் தரைப்பாலம் அமைத்தல், சித்தையன்கோட்டை புளியங்குளம் பகுதியில் பாலம் மற்றும் தார்ச்சாலை அமைக்க ரூ.1கோடியே 80லட்சம் ஒதுக்கீடு செய்தது, கன்னிவாடியில் வணிக வளாகத்துடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.6கோடி நிதி வழங்கியது, போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக வறுமையில் வாடும் முதியோர்களைக் காப்பாற்றும் வகையில், கடந்த 10 வருடங்களாக முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்த 3992 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கியுள்ளார். இதுதவிர நியாயவிலைக்கடைகள் இல்லாத கிராமங்களுக்கு புதிய நியாயவிலைக்கடைகள் தொடங்கப்பட்டதோடு, கட்டட வசதி இல்லாத நியாய விலைக் கடைகளுக்கு புதிய நியாயவிலைக்கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற மகத்தான சாதனைகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஒரு வருட காலத்திற்குள் ஆத்தூர் தொகுதியில் நிறைவேற்றியுள்ளார். பெண்களுக்குப் பேருந்தில் இலவச பயணம் வழங்கியதின் மூலம் மகளிரின் சிறு சேமிப்புகள் உயர்ந்ததோடு, அவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளது. 

 

கூட்டுறவுத்துறை மூலம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான விவசாயிகள் நன்மை அடைந்துள்ளனர். கூட்டுறவுச் சங்கங்களில் கடனுதவி வழங்க முடியாத நிலை போய் வீடு தேடிச் சென்று கடனுதவி வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன், கறவை மாடு கடன், கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குக் கடன் உட்பட எண்ணற்ற நலத்திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் கூடிய விரவில் செயல்படுத்தப்பட உள்ளது" என்று கூறினார்.