வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியில் இருந்து குடியாத்தம் வழியாக காட்பாடி நோக்கி மினி வேன் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சென்ராயனபல்லி பள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து மாலை தனியார் பள்ளி பேருந்து குடியாத்தம் அடுத்த காந்திநகர் அருகே சென்றபோது, அதிவேகத்தில் வந்த பள்ளி பேருந்து மினி வேன் மீது மோதியது.
இதில் மினி வேன் ஓட்டி வந்த பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சமத் உசேன் (31) பலத்த காயம் ஏற்பட்டு வேனுக்குள் சிக்கிக்கொண்டார். விபத்தை பார்த்துவிட்டு ஓடிவந்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சமத் உசேன் உயிரிழந்தார்
இந்தச் சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிப் பேருந்துக்குள் 5 மாணவர்களே இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பள்ளி வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் காயங்களுடன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பள்ளி, கல்லூரி பேருந்துகளை இயங்கும் ஓட்டுநர்கள், சீரான வேகத்தில் வாகனங்களை இயக்கவேண்டும் என அறிவுறுத்தல் வட்டார போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களால் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பெரும்பாலான ஓட்டுநர்கள் கடைப்பிடித்தாலும் கல்லூரி பேருந்துகளை இயக்குபவர்கள் கடைப்பிடிப்பதில்லை. காலை நேரத்தில் அரக்கபரக்க வாகனங்களை இயக்குவது, மாலையில் சீக்கிரம் வீடு போய் சேரவேண்டும் என வாகனங்களை இயக்குவது எனச் செயல்படுகின்றனர். இதனால் சீரான வேகம் என்பதைக் கடைப்பிடிப்பதில்லை.
கல்லூரி பேருந்து ஓட்டுநர்களைப்போலவே பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் சிலரும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் பேருந்துகள், வேன்களை இயக்குவது அதிகரித்துவருகிறது. அப்படி இயக்கிய ஒரு ஓட்டுநரால் இப்படியொரு விபத்து நடந்துள்ளது. இனி இதுபோன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க கண்காணிப்பு தீவிரமாக இருக்கவேண்டும் என்கிற குரல்கள் பொதுமக்களிடம் இருந்தே எழுகின்றன.