சென்னை, கோவையில் ஏழு இடங்களில் ஆவின் பால் கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்டு சோதனை ஓட்டமாக விற்கப்பட்டது. இந்த நிலையில் கண்ணாடி பாட்டிலில் பால் விற்பதை நுகர்வோர் விரும்புகிறார்களா அல்லது இல்லையா என்ற சர்வே முடிவை ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெகிழி பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. நெகிழி பொருட்கள் உற்பத்தியாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
கடந்த முறை இந்த வழக்கின் விசாரணையில், முதல் கட்டமாக அரசு நிறுவனமான ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் தான் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக கண்ணாடி பாட்டிலில் பால் அடைக்கப்பட்டு விற்பனை செய்ய ஏன் முயலக்கூடாது. அப்படி ஒரு திட்டத்தை முன்னெடுத்தால் மக்கள் அதற்கு எவ்வளவு ஆதரவு தருகிறார்கள் என்பதை அறிக்கையாகத் தாக்கல் செய்ய ஆவின் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். அதன்படி ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த அறிக்கையில், சென்னை மற்றும் கோவையில் ஏழு இடங்களில் கண்ணாடி பாட்டிலில் ஆவின் பால் விற்கப்பட்டு சோதனை ஓட்டமாக ஆய்வு நடத்தப்பட்டது. சென்னையில் வில்லிவாக்கம், ஹை கோர்ட் காலனி, திருமங்கலம் சாலை, குமாரசாமி நகர், திருநகர், விம்கோ நகர் ஆகிய இடங்களிலும், கோவையில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் கண்ணாடி பாட்டிலில் பால் விற்கப்பட்டது. ஆனால் அந்த சர்வே முடிவில் ஐந்து இடங்களில் கண்ணாடி பாட்டிலில் பால் வேண்டாம் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளிலேயே கொடுங்கள் என கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். பாட்டிலில் அடைத்து விற்கப்படும் போது விலை அதிகரித்துவிடும். எனவே பிளாஸ்டிக் பாக்கெட்டில் விற்கப்படும் பாலே தங்களுக்கு போதுமானது எனத் தெரிவித்துள்ளனர். இந்த சர்வே முடிவுகளைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை ஏற்ற நீதிமன்றம், வழக்கின் விசாரணையை அக்டோபர் ஒன்பதாம் தேதி ஒத்தி வைத்துள்ளது.