
நாகை அரசு தலைமை மருத்துவனையில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு நேற்று (19.10.2021) பிறந்த குழந்தைகளுக்கு தங்கக் காசு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி பண்டிகையைக் கொண்டாடினர் இஸ்லாமியர்கள்.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக மிலாடி நபி பண்டிகை பேரணிகள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மிலாடி நபியான நேற்று பிறந்த குழந்தைகளுக்கு நாகூர் முஸ்லிம் ஜமாத் சார்பாக பரிசுப் பொருட்கள் வழங்குவது என முடிவெடுத்து ஏற்பாடு செய்தனர்.
அந்த வகையில் மிலாடி நபி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் முதலாவதாக பிறந்த வேதாரண்யத்தை அடுத்துள்ள அண்டகத்துரை கிராமத்தைச் சேர்ந்த மேகலா - செந்தமிழ்ச்செல்வன் தம்பதிக்குப் பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்கக் காசையும், அடுத்தடுத்து பிறந்த 25 குழந்தைகளுக்கு கொசுவலை உள்ளிட்ட 25 பொருட்கள் அடங்கிய பெட்டகத்தையும் பரிசாக வழங்கி இஸ்லாமியர்கள் மிலாடி நபி பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.