Skip to main content

மிக்ஜாம் புயல் பாதிப்பு; நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Mikjam storm damage; Funded by actor Sivakarthikeyan

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி ஒரு மாத சம்பளத்தை வழங்கியதோடு, தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரணத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் விதமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து திமுக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள், இயக்கங்கள், தனிநபர்கள் என பலரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நம்மை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்த போது, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும், நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம். இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விளையாட்டு வீராங்கனைகளுக்குக் காசோலைகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி!

Published on 11/07/2024 | Edited on 12/07/2024
Minister Udhayanidhi gave checks to sport swomen

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நவம்பர் 10 முதல் 17 வரை உலக கேரம் போட்டி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டின் சார்பில் கே.நாகஜோதி, எம்.காசிமா, வி.மித்ரா என மூன்று கேரம் விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள 3 விளையாட்டு வீராங்கனைகளுக்கும், பயிற்றுநர் மரியா இருதயத்திற்கும் செலவீனத் தொகையாக தலா ரூ.1.50 லட்சத்திற்கான காசோலைகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் நியூசிலாந்தில் ஜூலை 16 முதல் 19 வரை நடைபெற உள்ள ஜூனியர் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ள ஜாய்ஸ் அஷிதாவுக்கு செலவீனத் தொகையாக ரூ.2.00 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விளையாட்டு வீரர்கள் சாதிக்க, வறுமை தடையாகக் கூடாது என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நோக்கம். அந்தத் தடையை நீக்க, தொடங்கப்பட்டதே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பிறருக்கு உதவவும், உதவிகளைப் பெறவும் இந்த இணைப்பில் சென்று தகவல்களை அறியலாம்: https://tnchampions.sdat.in/home” எனத் தெரிவித்துள்ளார்.  

Next Story

விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Campaigning for the Vikravandi by-election is over

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜூன் 14ஆம் தேதி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதன்  மூலம் இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக நாதக உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சை என மொத்தம் 29 பேர் களத்தில் உள்ளனர்.

அதே சமயம் அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தவெக தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் இன்று விக்கிரவாண்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்கிரவாண்டி அடுத்த கெடார் கிராமத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஒரத்தூர் பொதுக்கூட்டத்தில் நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்டமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பிரசாரம் செய்தனர்.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்லில் நாளை மறுதினம் (10.07.2024) வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் தேர்தலுக்கான பரப்புரை இன்று (08.07.2024) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. விக்கிரவாண்டியில் கடந்த 20 நாள்களாக நடைபெற்று வந்த அரசியல் கட்சியினரின் தீவிர பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிப்படி மாலை 6 மணிக்கு மேல் வாக்கு சேகரிக்கவும், பரப்புரை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விக்கிரவாண்டியில் இருந்து வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் உடனடியாக வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் ஜூலை 10 இல் வாக்குப்பதிவு நடைபெற்று ஜூலை 13 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.