வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக இன்று (05.12.2023) மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது.
அதே சமயம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாகத் தொடர்ந்து பெய்து வந்த வரலாறு காணாத மழையால், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி இந்த மாவட்டங்களில் இந்த புயல் மழையின் தாக்கம் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியான தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக் கூடத்திற்கு நேரில் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, பாய், போர்வை ஆகியவற்றை வழங்கி, அவர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, “மழைநீரை அகற்றிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இயல்புநிலை திரும்பும். தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும்” என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, கல்யாணபுரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அம்முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, போர்வை, பாய் ஆகியவற்றை வழங்கினார். பின்னர், யானைகவுனியில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசி, அவர்களுக்கு உணவு, போர்வை, பாய் ஆகியவற்றை வழங்கினார். பின்னர், சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலிருந்து களப்பணி ஆற்றுவதற்காக வருகை தந்தவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, இக்கட்டான இச்சூழ்நிலையில் பணிகளை மேற்கொள்ள வருகை தந்துள்ளவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, பணிகளை செவ்வனே மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
அதன் பின்னர் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் மிக்ஜாம் புயல் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். களத்தில் இறங்கி உதவிகள் செய்துகொண்டிருக்கும் திமுகவினருடன், இன்னும் பல தொண்டர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாதிப்புகளில் இருந்து மீண்ட பகுதிகளைச் சேர்ந்த திமுக தொண்டர்கள் விரைந்து வாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.