
மதுரையில் தம்பதியினர் நள்ளிரவில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஆனையூர் அருகே சக்தி கண்ணன்-சுபா தம்பதியினர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த சனிக்கிழமை இரவு குழந்தைகள் இருவரும் கீழே உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், சக்தி கண்ணனும் அவரது மனைவியும் மாடியில் உள்ள அறையில் உறங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவில் திடீரென மாடியிலுள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டதை அக்கம்பக்கத்தினர் கண்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்புத் துறையினர் ஏணியை வைத்து மேலே ஏறிச் சென்று தீயை அணைத்த நிலையில், உள்ளே சக்திகண்ணனும் அவரது மனைவி சுபாவும் தீயில் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. இத்தம்பதிக்கு 17 வயதில் மகளும், 15 வயதில் மகனும் மகளும் உள்ள நிலையில் ஒரே நேரத்தில் இரு குழந்தைகளின் நிர்க்கதியாய் விட்டு விட்டு இருவரும் இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணையில் இந்த சம்பவம் தற்கொலை முயற்சி இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று முதல் கொலு வைத்து வழிபாடு நடத்தியதாகவும் மண்விளக்கு ஏற்றப்பட்ட நிலையில் அதன் மூலம் தீப்பற்றி இருக்கலாம், அல்லது ஏ.சி ஏற்பட்ட மின்கசிவு காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.