கடந்த 14 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி இருந்தது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது புயலாக மாறியுள்ளது.
தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு மிதிலி (Midhili) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு கொடுத்த பரிந்துரையின் பேரில் இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு இரண்டு புயல்கள் வங்கக் கடலில் உருவாகியது. இந்நிலையில் இந்த ஆண்டின் மூன்றாவது புயலாக மிதிலி உள்ளது. மிதிலி புயல் வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை வங்கதேசத்தின் மோங்லா மற்றும் கேபுபரா இடையே கரையைக் கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் கரையைக் கடக்கும் பொழுது 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதிலி புயல் காரணமாகத் தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்று, நாளை, மறுநாள், நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, பாம்பன், நாகை, எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.