Skip to main content

மைக்ரோ ஜெராக்ஸ் பிட் விவகாரம்: தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த 15 ஆசிரியர்கள் பணியில் இருந்து விடுவிப்பு!

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

Micro Xerox bit affair: 15 teachers fired for taking part in exams

 

தமிழகத்தில் மே 5- ஆம் தேதி பிளஸ்- 2 பொதுத்தேர்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மே 16, 17- ஆம் தேதிகளில் பிளஸ்- 1, பிளஸ்- 2 தேர்வு நடந்தது. கொல்லிமலை அருகே, ஒரு குறிப்பிட்ட ஜெராக்ஸ் கடையில் மாணவ, மாணவிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

 

தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன்குமார் மற்றும் அலுவலர்கள் சந்தேகத்தின்பேரில், குறிப்பிட்ட அந்த ஜெராக்ஸ் கடைக்குச் சென்று விசாரித்தனர். 

 

அந்த கடையில் இருந்து மாணவர்கள் பலர், தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக முக்கிய வினாக்களுக்கான விடைகளை மைக்ரோ ஜெராக்ஸ் பிட் ஆக தயாரித்து எடுத்துச் செல்வதற்காக வந்திருப்பது தெரிய வந்தது. கடை அருகில் இருந்தும் ஏராளமான மைக்ரோ ஜெராக்ஸ் காகிதங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். 

 

இதையடுத்து குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் தேர்வுக்கூடத்தில் இருந்தே மாணவ, மாணவிகளிடம் இருந்து மைக்ரோ ஜெராக்ஸ் பிட் காகிதங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

 

இதையடுத்து பணியின்போது அலட்சியமாக இருந்ததாக கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் பணியாற்றி வந்த தேர்வறை கண்காணிப்பாளர்கள் 15 பேரை உடனடியாக அப்பணியில் இருந்து நீக்கப்பட்டனர். தேர்வுத்துறை இணை இயக்குநர் அறிவுறுத்தலின் பேரில், நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி இதற்கான உத்தரவை பிறப்பித்தார். 

 

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''மைக்ரோ ஜெராக்ஸ் பிட் காகிதங்கள் பிடிபட்டதை அடுத்து, தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறோம். 

 

தேர்வுகள் துவங்கும் முன்பே மாணவ, மாணவிகளிடம் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் முழுமையாக சோதனை நடத்திய பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்க வேண்டும். கொல்லிமலையில் தேர்வர்களை சோதனை செய்வதற்காக பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்,'' என்றனர். 

 

மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பிடிபட்ட விவகாரத்தில் அறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 15 ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பணியில் இருந்து விடுவிக்கப்ப்டட சம்பவம் பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.