'மோடி வந்து பேசி விட்டு போனால் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு 5 சதவிகித ஓட்டு அதிகமாகும் 'என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
திருவள்ளூரில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில்,''பாஜக பாஜக என்று மார்தட்டி பேசிக் கொண்டிருக்கிறார்களே. இந்த பிஜேபியினுடைய பழைய கட்சிக்கு பேர் என்ன தெரியுமா? ஜன சங்கம். இது மோடிக்கு தெரியுமோ? தெரியாதோ? எனக்கு தெரியாது. இன்னைக்கு இருக்கும் பசங்களுக்கு தெரியாது. பாஜகவின் ஒரிஜினல் நேம் 'ஜன சங்கம்'. அன்றைக்கு அவர்களுடைய சின்னம் விளக்கு. எமர்ஜென்சி நேரத்தில் ஜன சங்கத்தை கலைத்தார்கள். எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும்போது அண்ணா திமுக என்று ஆரம்பித்தார். கடற்கரையில் கூட்டத்தை ஆரம்பிக்கும் போது சொன்னார் 'அண்ணாவிடம் பேசினேன். அண்ணா என்னிடத்தில் கட்சி ஆரம்பிக்க சொன்னார்' ஏதோ அண்ணாவே வந்து பேசிவிட்டு போனது போல கதை விட்டார். எனவே திமுக என்ற பெயருக்கு முன்னால் அண்ணா என்ற பெயரை போட்டு அதிமுக என ஆரம்பித்தார். எமர்ஜென்சி நேரத்தில் அதிமுகவை அனைத்து இந்திய அதிமுக என மாற்றினார்.
ஆனால் அன்றைக்கு எமர்ஜென்சி வந்த நேரத்தில் எவன் சொன்னாலும் சரி கருப்பு சிவப்பு கொடியையும், திமுகவின் பெயரையும் மாற்ற மாட்டேன் என்று சொன்னவர் கலைஞர். இன்றும் திமுக அந்தப் பேரோடு நடக்கிறது என்று சொன்னால் இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கு இந்த யோக்கிதை இருக்கிறது. 1957ல் நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் நின்றோம். அன்று முதல் இன்று வரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற கட்சி திமுகவே தவிர வேறு எந்த கட்சியும் கிடையாது. காங்கிரஸ்கூட காளை மாட்டில் ஆரம்பித்து ராட்டினத்திற்கு வந்து இப்பொழுது கையில் நிற்கிறது. ஏன் அதிமுக கூட இரட்டை புறா, சேவல் என்றெல்லாம் சொன்னார்கள். இன்னும் அடுத்த மாசத்தில் என்ன சின்னத்தில் நிற்கப் போகிறார்களோ என்னவென்று தெரியவில்லை.
மோடி அவர்களே நீங்கள் தமிழகம் வந்து பேசிவிட்டு போங்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் வந்தீர்கள் என்றால் எங்களுக்கு 5 சதவிகிதம் ஓட்டு அதிகமாகும்'' என்றார்.