நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது.
நடிகர் விஜய் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தியிருப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் கட்சிக் கொடி அறிமுகப்படுத்தியது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''நாங்கள் 52 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சி. விஜய் தொடங்கி இருப்பதை நாங்கள் வாழ்த்துகிறோம். எங்கள் பொதுச் செயலாளர் எல்லாரையும் பெருந்தன்மையோடு வரவேற்பார். விஜய்யும் ஒரு சாமானியர். எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லாமல் மன உறுதியோடு கட்சியைத் தொடங்கி இருக்கிறார். அந்த தைரியமே மிகப்பெரிய பாராட்டுக்குரியது.
எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எப்படி கட்சியை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள் என்பதை விஜய்யும் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை காண முடிகிறது. அண்ணாவின் கட்டவுட், எம்ஜிஆரின் கட்டவுட் வைத்து அதற்கு இடையில் அவருடைய கட்டவுட்டை வைத்திருக்கிறார். எனவே அண்ணாவையும் எம்ஜிஆரையும் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று எங்களுக்கு எண்ணத் தோன்றுகிறது. எப்படி ஆயினும், எதுவாயினும், யாராயினும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று சொன்னால், தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்கிறேன் என்று சொன்னால் அவர்களை அதிமுக சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதில் முதன்மையானவராக இருப்பார் எடப்பாடி பழனிசாமி'' என்றார்.