Skip to main content

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை ரத்து!

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Mettupalayam - Uthakai Hill train service cancelled

 

மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதன் காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. காந்திபுரம் பகுதியில் ராட்சத பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் பாதையில் ராட்சத பாறைகள் விழுந்துள்ளது. மேலும் 4க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காவிரி விவகாரம்; சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம்!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Train picket struggle in Chidambaram over Cauvery issue

கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரியும், நடவடிக்கை எடுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட  சிதம்பரம் காந்தி சிலையிலிருந்து தமிழ்நாடு விவசாய சங்க கடலூர் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக சிதம்பரம் ரயில் நிலையம் சென்றனர். அங்கு சென்னையிலிருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து மறியல் செய்தனர்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச்செயலாளர் அரங்க தமிழ்ஒளி, நகர செயலாளர் ஆதிமூலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாநில நிர்வாகி மணிவாசகம், மாவட்ட நிர்வாகிகள் சேகர், தமீம்முன் அன்சாரி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், சிதம்பரம் நகர மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூசா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சிதம்பரம் நகர செயலாளர் ராஜா , மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி தலைமையில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story

கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
heavy rain; Holiday notification for schools

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், தருமபுரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று (16.07.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 16) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.