சென்னையில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், மாற்றுப் போக்குவரத்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. முதல்கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ சேவை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு மெட்ரோ ரயில் திட்டம் மூன்று வழித்தடங்களில் கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மூன்று வழித்தடங்களில் ஒரு வழித்தடத்தில் இரண்டு முக்கிய மேம்பாலங்கள் இடிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறுசேரியில் இருந்து மாதவரம் செல்லும் மெட்ரோ வழித்தடத்தில் உள்ள அடையாறு மேம்பாலமும், ராயப்பேட்டை மயிலாப்பூர் மேம்பாலமும் முழுவதுமாக இடிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட இந்த இரண்டு மேம்பாலங்களையும் இடிக்க சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சியிடம் எல்&டி நிறுவனம் அனுமதி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த இரண்டு மேம்பாலங்களையும் இடிக்கும் பணிகள் தொடங்க இருப்பதாக எல்&டி தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பாலங்களை இடிக்காமல் மெட்ரோ திட்டத்தைக் கொண்டு செல்ல எவ்வளவோ முயன்றும் முடியாததால், தவிர்க்க முடியாமல் இந்த இரண்டு பாலங்களையும் இடிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.