எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை தியாகராயர் நகரில் தனியார் தொண்டு நிறுவனத்தைத் துவக்கி வைத்தார்.
இதன் பின் பேசிய அவர், “அரசியலும் திரைப்படமும் ஒன்றுடன் ஒன்று கலந்து இருக்கிறது. திரைப்பட இயக்குநர் சந்திரசேகர், சாமானியன் ஒருவன் முதலமைச்சராக வருவது அவ்வளவு எளிதல்ல எனக் குறிப்பிட்டார். உண்மையிலேயே அது அப்படித்தான். திரையுலகிற்கு வருவது மிகக் கடினம். அது போல் தான் அரசியலும். திரைப்படத்திலும் அரசியலிலும் முத்திரை பதிப்பது அவ்வளவு எளிதல்ல. அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
ஒரு சிறந்த நடிகர். பெரும் ரசிகர் கூட்டத்தினை வைத்திருப்பவர். அடுத்த நாள் படம் வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்குச் சான்றிதழ் வாங்குவது தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது. மறுநாள் கண்டிப்பாகப் படம் வெளிவர வேண்டும். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் தான் இதற்குத் தீர்வு காண வேண்டும் என என்னை நாடினார்கள். அதற்குத் தலைமைச் செயலாளர், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மத்திய அரசில் இருக்கும் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அதற்கு அனுமதி வாங்கி திரைக்குக் கொண்டு வருவதற்கான வேலையைச் செய்து கொடுத்தோம்” எனக் கூறினார்.
நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெளியான போது அதில் இடம் பெற்ற புறா மற்றும் பாம்புக் காட்சிகள் கிராபிக்ஸ் எனச் சொல்லப்பட்டாலும், அப்போது அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் பழனிசாமி அந்த நிகழ்வைத் தான் சூசகமாக நினைவு கூறுகிறார் என்று சொல்லப்படுகிறது.