Skip to main content

மனநோயாளிகளை சாமியாராக்கும் பிரபலங்கள்-ஏமாற்றப்படும் பக்தர்கள்

Published on 26/05/2024 | Edited on 26/05/2024
nn

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பிரபலமானது. தென்னிந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். கிரிவலப்பாதையில் ஆயிரக்கணக்கான சாதுக்கள், சாமியார்கள் என்கிற பெயரில் யாசகர்கள் (பிச்சைக்காரர்கள்) இருக்கின்றனர். வித்தியாசமான இந்த யாசகர்களில் யாராவது ஒருவரை, சாது, ஞானி என பிரபலப்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் கும்பல்கள் திருவண்ணாமலையில் உருவாகியுள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிச்சைக்காரர் பசிக்கும்போது மட்டும் ஏதாவது ஒரு ஹோட்டல் அல்லது டீ கடையில் கையேந்துவார், சிலர் தருவார்கள், சிலர் 'சூடுதண்ணிய ஊத்திடுவன் போய்டு' என விரட்டிவிடுவார்கள். இட்லி, டீ தந்தால் வாங்கி சாப்பிட்டுவிட்டு அண்ணாமலையார் கொவில் அம்மணியம்மன் கோபுரம் கால்வாய் ஓரம் படுத்துக்கிடப்பார். தாடி வளர்த்துக்கொண்டு, அழுக்கு துணியுடன் எப்போதாவது யாரிடமாவது மூக்குபொடி கேட்பார். இவருக்கு வயதானதால் நடக்கமுடியாமல் தாங்கி நடக்கவும், தன்னைப் பார்த்து குறைக்கும் நாய்களை விரட்டவும் கையில் ஒரு கம்பு வைத்திருந்தார். அடிக்கடி கடைகளில் மூக்குபொடி வாங்கியதால் கடைக்காரர் ஒருவர் மூக்குபொடி சாமியார் என அழைக்க அவர் பெயரே மூக்குபொடி சாமியார் என்றானது.

மூக்குபொடி சாமியார் கையில் வைத்துள்ள கம்பால் அடி வாங்கினால், அவரிடம் திட்டு வாங்கினால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும், செல்வம் பெருகும் என சிலர் திட்டமிட்டு பரப்பிவிட்டார்கள். அதை நம்பி வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் படையெடுத்து வந்தனர். நடிகர்கள் சந்தானம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போன்ற அரசியல், சினிமா பிரபலங்கள் இந்த மூக்குபொடி சாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க வந்து தேவுடு காத்துக் கொண்டிருந்தார்.

மூக்குபொடி சாமியார் என்கிற யாசகரை பிரபலங்கள் வணங்க வரும்போது எல்லாம் டி.டி.வி.தினகரனின் நண்பரும் பிரபல ஹோட்டல் அதிபரான முத்துக்கிருஷ்ணன் என்பவர், மூக்குபொடி சாமியாருக்கு புத்தாடை அணிவித்து தனது ஹோட்டலுக்கு அழைத்து வந்து உட்கார வைத்துவிடுவார். அங்கு அவரை வணங்கிவிட்டு அவரிடம் திட்டு வாங்க காத்துக்கொண்டு இருந்தார். மூக்குபொடி சாமியார் கால் தங்கள் வீட்டில், தொழில் நிறுவனத்தில் படவேண்டும் என அவரை அழைத்தது. அந்த கும்பல், அவரை வெளிமாநிலங்கள், வெளியூர்களுக்கு அழைத்து சென்று கல்லா கட்டியது. நான்கு வருடங்களுக்கு முன்பு அவர் இறந்தபோது, அவரது உடலை கிரிவலப்பாதையில் ஒரு இடத்தில் அடக்கம் செய்து இப்போது அதை ஒரு கோயிலாக்கி கல்லா கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

nn

இப்போது வயதான மனநோயாளியான ஒரு பெண்மணி வாயில் எச்சில் ஒழுக விட்டுக்கொண்டு கிரிவலப்பாதையில் எங்காவது சுற்றிக்கொண்டு இருப்பார். இவர் பெயர் தொப்பியம்மா, இவர் பெரிய ஞானி எனச்சொல்லி சிலர் பரப்பி விட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த மனநோயாளி சித்தராக வடிவமைக்கப்பட்டு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் பிரபலப்படுத்தப்பட்டார். இப்போது கூட்டம் கூட்டமாக வந்து வணங்குகின்றனர். அவரை வைத்து சிலர் கல்லா கட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அருகிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இந்த பெண்மணி மனநோயால் பாதிக்கப்பட்டு பெங்களுருவில் சுற்றிக்கொண்டு இருந்தவர், திருவண்ணாமலை வந்துள்ளார். கொரோனாவுக்கு முன்பிருந்து கிரிவலப்பாதையில் சுற்றி சுற்றி வருகிறார். இவரை பெண் சித்தராக்கியதன் விளைவாக இந்த மனநோயாளி பின்னால் எப்போதும் 10 பேர் சுத்திக் கொண்டு இருக்கின்றனர். அவர் எச்சில் பிரசாதம் என்கிறார்கள். அவர் யாரையாவது பார்த்து எச்சில் துப்பி அது தங்கள் மீது விழுந்தால் பாக்கியம், அதிர்ஷ்டம் என்கிறார்கள்.

இந்த தொப்பியம்மா என்கிற மனநோயாளியை கடந்த மே 25ஆம் தேதி டி.டி.வி.தினகரன் கிரிவலப்பாதையில் உள்ள ஒரு ஆஸ்ரமத்தில் பார்த்து வணங்கினார். அந்த மனநோயாளி தன் மீது எச்சில் துப்புவார் என அவர் பின்னாலயே சென்றார். இந்த வீடியோ பிரபலமாகியுள்ளது. பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். பக்தி என்கிற பெயரில் மனநோயாளிகள் பின்னால் சுற்றும் இவர்கள் மனநோயாளிகளா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பக்தி இருக்க வேண்டியதுதான் அது அவர்களது தனிமனித உரிமை. ஆனால் பக்தி என்கிற பெயரில் மனநோயாளிகளையும், பிச்சைக்காரர்களையும் சாது, ஞானி என விளம்பரத்தி காசு சம்பாதிக்கும் கும்பலுக்கு இப்படி பிரபலங்கள் துணை போகலாமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கஞ்சா போதையில் அடித்துக் கொண்ட யாசகர்கள் - அலறியடித்து ஓடிய கிரிவல பக்தர்கள்

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
thiruvannamalai incident;Screaming Krivala devotees

திருவண்ணாமலை நகரில் கஞ்சா அதிகமாகிவிட்டது என்கிற புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ச்சியாக ரெய்டு செய்து கஞ்சா விற்பனையாளர்ளைப் பிடித்து சிறையில் அடைத்து வருகின்றனர். கடந்த வாரத்தில் 5 பெண்கள் உள்பட 12 பேரை கைது செய்துள்ளனர். அப்படியிருந்தும் திருவண்ணாமலை நகரிலேயே கஞ்சா விற்பனையைத் தடுக்க முடியாமல் தோல்வியடைந்துள்ளது காவல்துறை.

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலைக் கிரிவலத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வார இறுதி நாட்களில் அது நான்கு மடங்காக உயர்ந்துள்ளது. இரவு நேரத்தில் வெளிமாநில பக்தர்கள் பக்தியுடன் கிரிவலம் வருகின்றனர்.

ஜூன் 14ஆம் தேதி இரவு 9.0 மணியளவில் கிரிவலப்பாதை சூரிய லிங்கம் அருகே சாமியார்கள் என்கிற யாசகர்கள் சிலர் ரோட்டில் ஓட ஓட அடித்துக்கொண்டனர். அதோடு கிரிவலம் வந்த பக்தர்கள் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர், அவர்களுக்குள் ஏதோ தகராறு உருவாக கஞ்சா போதையில் இந்த யாசகர்கள் அடித்துக்கொண்டது கிரிவலப்பாதையில் சென்ற பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சாலையோரம் பக்தர்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதோடு பக்தர்கள் கால்வலியை போக்க அமர்வதற்காக சாய்வு பெஞ்சுகளும், மழை, வெயிலுக்கு ஒதுங்கி நிற்க நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை யாசகர்கள் ஆக்கிரமித்து தங்களுக்கான வாழ்விடமாக வைத்துக்கொண்டு பக்தர்களிடம் யாசகம் பெறுகின்றனர். இவர்கள் பக்தி மார்க்கத்தில் இருக்கிறார்கள் என பலரும் மூன்று வேளையும் இலவசமாக உணவு, காபி தருகிறார்கள். யாசகம் பெறும் பணத்தில் கஞ்சா, மது போன்ற போதைப் பொருட்களை வாங்கி உட்கொண்டுவிட்டு கிரிவலப்பாதையில் அட்டகாசம் செய்வதாகக் கூறப்படுகிறது.

யாசகர்கள் அடித்துக் கொள்வது குறித்து காவல்துறையினருக்கு தகவல் சொல்ல தொடர்புகொண்டபோது யாரும் போன் எடுக்கவில்லையாம். இவர்கள் அடித்துக்கொண்டு கொலையாகிவிடுமோ என மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்கள், அவரும் ஃபோன் எடுக்கவில்லையாம். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக யாசகர்கள் அடித்துக்கொண்டு சண்டை போட்டார்கள் என்கிறார்கள் அப்போது வாக்கிங் சென்றவர்களும், அங்கு கடை வைத்திருப்பவர்களும்.

கிரிவலம் பாதுகாப்புக்கு என 24 மணி நேர இருசக்கர வாகன ரோந்து படை அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் கிரிவலப்பாதையில் ரவுண்ட்ஸ் வந்து கொண்டே இருப்பார்கள். தவறு செய்பவர்களை எச்சரித்தார்கள், பல சம்பங்கள் இதனால் தடுக்கப்பட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இப்போது ரவுண்ட்ஸ் சரியாக வருவதில்லை என்கிறார்கள். இதனால் கஞ்சா, மது குடித்துவிட்டு இவர்களுக்குள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வார்கள் என்கின்றனர்.

 

 நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

Next Story

''நேரம் கனித்துள்ளது; என் அரசியல் பிரவேசம் தொடக்கம்'' - சசிகலா பேச்சு

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
 ''The time is ripe; My political entry begins'' - Sasikala speech

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்...' திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி முழு சுதந்திரமாக நடக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா பேசுகையில், ''விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்திருப்பது சரியான முடிவு அல்ல. அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கின்றனர். ஆனால் எனக்குக் குறிப்பிட்ட ஜாதியினர்தான் சொந்தம் என்றெல்லாம் கிடையாது. ஜெயலலிதாவும் ஜாதி பார்த்துப் பழகியவர் அல்ல. நான் ஜாதி பார்த்து இருந்தால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கி இருக்க மாட்டேன். சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்துள்ளது. தற்போது அதிமுக மூன்றாவது இடத்திற்கும் நான்காவது இடத்துக்கும் சென்றுள்ளது. தானும் கெட்டு கட்சியையும் சிலர் கெடுத்து விட்டனர். அதிமுகவினர் ஒன்றிய வேண்டும் என நான் அடிக்கடி கூறி வந்ததற்கான நேரம் தற்பொழுது கனிந்துள்ளது. அதிமுகவில் தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடங்கியுள்ளதால் கட்சி அழிந்துவிடும் என்று கூற முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்'' என்றார்.