நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அனைவரும் பெண்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லியும், அவர்களின் முக்கியத்துவம் இந்த சமுதாயத்திற்கு தேவை என்றும், அவர்களின் பங்கு சிறப்பாகவும், நன்றாகவும் உள்ளது என்றும் சமூக வலைத்தளங்களில் புகழும் இந்த சமயத்தில் கட்டிய மனைவி தொல்லையினால் ஆண்டுக்கு 10,000 ஆண்கள் தமிழ்நாட்டில் இறக்கின்றனர் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆண்களின் பாதுகாப்பிற்காக தனி அமைச்சகம் அமைக்க வேண்டும், மனைவிமார்கள் கொடுக்கும் தொல்லையால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு பத்தாயிரம் ஆண்கள் இறப்பதாக கூறி அதற்கு அரசு விசாரணை ஆணையம் வைக்க வேண்டும், ஆண்களுக்கென்று தனி அமைச்சகம் வேண்டும் மற்றும் இதுபோல பல கோரிக்கைகளை வைத்தனர். மேலும் பெண் காவல் நிலையங்களில் ஆண்களை தரக்குறைவாக நடத்துகின்றனர், எப்படி பெண்களை விசாரிக்கும்பொழுது பெண் காவலர்கள் இருக்கிறார்களோ அதேபோல ஆண்களை விசாரிக்கும் பொழுது ஆண் காவலர்கள் இருக்க வேண்டும், ஆண்களை இப்படி பெண்கள் அடிமைப்படுத்தியுள்ளதை பெரியார், பாரதியார், பாரதிதாசன் என்று பெண்களுக்காக போராடிய தலைவர்கள் இருந்திருந்தால் இவர்கள் செய்யும் அராஜகத்தை பார்த்து வருத்தப்பட்டிருப்பார்கள் என்றும் கூறியுள்ளனர்.
இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கமாக அவர்கள் கூறியது, பெண்கள் ஆண்கள் மீது கொடுக்கும் அவதூறு வழக்குகளை தவிர்த்திடவும், அவ்வாறு கொடுப்பவர்களை கைது செய்யவேண்டும் என்றும், ஆண்கள் தாங்கள் படும் கஷ்டங்களை வெளியேவந்து தைரியமாக சொல்ல வேண்டும் என்பதுதான்.