Memories shared by thamimun ansari about Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள்எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி விஜயகாந்த் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டவை, “கடந்த 2014 ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த்தோடு எனக்கு நல்ல நப்பு ஏற்பட்டது. அப்போது இந்தியா நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டிருந்தது. விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர் ஜலால்; அவருடன்தான் அரசியல் கடந்து மனம்விட்டு பல விஷயங்களையும் பகிர்ந்துகொள்வார். அப்போது பிப்ரவரி மாதம் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜலாலின் வீட்டில் விஜயகாந்த் தங்கியிருந்தார். அந்த நேரத்தில்தான் நானும் மலசியா சென்று நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த்தை திமுக கூட்டணியில் சேர்த்துகொள்வதாற்காக முயற்சி செய்தேன். அதை அறிவாலயத்தில் இருந்த கலைஞரிடமும் கூறினேன்; நல்ல விஷயம் கூட்டணி நல்லபடியா அமையனுன்னு விரும்பினார். நானும் ஜலால் மூலமாக விஜயகாந்த்தை கோலாலம்பூரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் சந்தித்தேன்.

Advertisment

அப்போது என்னை பார்த்தவுடன் உற்சாகமாக வரவேற்றார் விஜயகாந்த். பெரிய தலைவர் போன்றோ, தமிழ்நாட்டின் பெரிய நடிகர் போன்றோ எந்த விதமான எண்ணமும் துளியும் அவரிடம் இருந்து வெளிப்படவில்லை. அது எனக்கு மிகவும், ஆச்சரியமாக இருந்தது. பின்பு, திமுக கூட்டணியில் இணையவேண்டும்; நாங்க எல்லாம் விரும்புகிறோம், கலைஞரும் அதைத்தான் விரும்புகிறார். என்று எடுத்துகூறினோம். இதையெல்லாம் பொறுமையாக கேட்டுகொண்டார். கலைஞரிடம் போன் போட்டு தருகிறோம் பேசுங்கள் என்றதும், ‘எம்.ஜி.ஆரை நான் பார்த்தால் விழுந்துடுவேன்; கலைஞர் கிட்ட நான் பேசுனால் விழுந்துடுவேன். அவரு என்ன விஜி விஜின்னுதான் பாசமா கூப்டுவாறு அதுனால அவர்கிட்ட பேசுனா விழுந்துடுவேன்’ போன் போடவேண்டாம் என்று கூறிவிட்டார். நாம் ஊடகங்களில் பார்த்ததை விட நேரில் பார்க்கும் போது மிகவும் எளிமையானவர் மட்டுமல்ல இனிமையானவர் என்று புரிந்துகொள்ள முடிந்தது.

விஜயகாந்த் அதிக கோபப்படுவார் என்று கூறுவார்கள், ஆனால் அந்த கோபம் என்பது குழந்தையின் கோபம்; கோபத்தை காட்டியபின்பு அதனை மறந்து சகஜ நிலைக்கு வந்துவிடுவார். அந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட வேண்டிய நிலையில் அது நடக்காமல் போய்விட்டது; அது எங்களுக்கெல்லாம் கூட வருத்தம் தான். அப்படிப்பட்ட கேப்டன் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசியலில் களமாடமுடியாத நிலை எல்லாருக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. தமிழக அரசியலில் மூன்றாவது சக்தியாக வளர்ந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், உடல் நிலை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட முடியாமல் போய்விட்டது. மூன்றாவது சக்தியாக வளர்ந்த விஜயகாந்த் கடைசி வரைக்கும் அவர் போக வேண்டிய தூரத்தை எட்டாமல் போய்விட்டாரே என்று வேதனையாக இருக்கிறது. கட்சி அரசியலை கடந்த அனைத்து மக்களும் இதை நினைத்துதான் தற்போது வேதனைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்” என வருத்தத்துடன் தெரிவித்தார்.

Advertisment