Melpathi Dalit's fear to vote

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில்300 ஆண்டுகள் பழமையான தர்மராஜா, திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த ஆண்டு நடந்த தீமிதி திருவிழாவின் போது, சாமி தரிசனம் செய்ய அப்பகுதியைச் சேர்ந்த தலித் மக்கள் சென்றனர். அப்போது பெரும்பான்மை சமூகத்தினர், அவர்களை கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மிரட்டினர். இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பட்டியலின அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொன்முடி உறுதி தந்தார். இதனை அறிந்த பெரும்பான்மைப் பிரிவைச் சேர்ந்த மக்கள் கோயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அங்கு சென்றனர். அப்போது அவர்கள் தங்களின் சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அரசு அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நடந்துகொண்டு இருக்கும்போதே பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி அதில் இருந்த சிலர் தங்கள் கையிலிருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த அந்த மண்ணெண்ணெய் பாட்டில்களைப் பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களைக் காப்பாற்றினர்.

Melpathi Dalit's fear to vote

Advertisment

இரு தரப்பினரும் அங்கு போராட்டம் போராட்டம் நடத்தியதால் யாரும் கோயிலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படவே, இருதரப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. இதனால், வருவாய் கோட்டாட்சியர் திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்தார்.

பிறகு எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி, பொதுமக்களை கோயிலினுள் அனுமதிக்காமல், கோயிலை திறப்பதற்கும், அறநிலையத் துறை சார்பில் நியமிக்கப்படும் பூசாரியைக் கொண்டு ஒரு கால பூஜை நடத்துவதற்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி கோயில் திறக்கப்பட்டு, அங்கு ஒரு கால பூஜை மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தங்களுக்கு தனி வாக்குச்சாவடி வேண்டும் என மேல்பாதி பகுதியில் உள்ள தலித் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment

இதுதொடர்பாக மேல்பாதி பகுதியில் வசித்துவரும் தலித் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம்ஒரு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், “எந்த சமயத்திலும், பிரச்சனையை உருவாக்க பெரும்பான்மை சமூகத்தினர் காத்திருக்கின்றனர். பெரும்பான்மை சமூகத்தினர் எந்த சமயத்திலும் பிரச்சனையை ஏற்படுத்தலாம். மேல்பாதி கிராமத்திற்கான வாக்குச் சாவடி என்பது பெரும்பான்மை மக்கள் இருக்கும் பகுதியில் அமைந்துள்ளது. எனவே அங்கு சென்று வாக்கு அளிக்க எங்களுக்கு அச்சமாக உள்ளது. எனவே எங்களுக்கு தனியாக வாக்குச் சாவடி அமைத்து தர வேண்டும்” என கோரியுள்ளனர்.