Skip to main content

சின்னாளபட்டியில் மீனாட்சி திருக்கல்யாணம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Published on 02/05/2023 | Edited on 03/05/2023

 

Meenakshi Thirukalyanam at Chinnalapatti; thousands of people participate

 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள சின்னாளபட்டியில் ஸ்ரீராம அழகர் தேவஸ்தான கமிட்டி சார்பாக சித்திரை திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதுபோல் இந்த வருட 96வது சித்திரை திருவிழாவை முன்னிட்டு முதல் விழாவாக மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. காலை 8 மணியளவில் மாப்பிள்ளை (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) மற்றும் மணப்பெண் (மீனாட்சி அம்மன்) அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் மணமக்களுக்கு நலங்கு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கெயினப் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கெயினப் டெக்னோ டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகளுமான தொழிலதிபர் இந்திரா துவாரகநாதன் மற்றும் தொழிலதிபர் கீதாமணி ஆகியோர் மணமக்களுக்கு நலங்கு செய்தனர்.

 

அதன் தொடர்ச்சியாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மணமக்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு மணமக்களுக்கு சீர்வரிசை செய்யும் நிகழ்ச்சி முடிந்த பின் காலை 11 மணி அளவில் மந்திரம் முழங்க மீனாட்சி அம்மன் கழுத்தில் சுந்தரேஸ்வரர் திருமாங்கல்யம் அணிவித்தார். அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் பூ மற்றும் மஞ்சள் கிழங்கு அணிந்து மாங்கல்யம் அணிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மணப்பெண் (மீனாட்சி அம்மன்) சார்பாக விஜய்- பிரேமலதா தம்பதியினர் சீர்வரிசை வழங்க மணமகன் (சுந்தரேஸ்வரர்) சார்பாக தேவஸ்தான கமிட்டி தலைவர் கணேஷ் பிரபு – ஜமுனா தம்பதியினர் பெற்றுக்கொண்டனர். அதன்பின்னர் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் மொய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் விருப்பம் போல் மொய் பணம் அளித்தனர். திருமணம் முடிந்தபின் மணமக்களுக்கு பாலூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு பொன் விழா மண்டபம் அருகே உள்ள பந்தலில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்