Skip to main content

நெல்லையில் 5 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Medical examination for 5 thousand people in Nellai

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புக் குழு, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 103 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 5000 நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் பெய்த கன மழையினால் தண்ணீர் தேங்கி பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நோய்த் தடுப்பு சிகிச்சை வழங்குவதற்காக இன்று (20.12.2023) 103 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 5000 நபர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் 108 நபர்களுக்கு காய்ச்சலும், 158 நபர்களுக்கு சளி, இருமல் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

மதுரை, பரமக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளிலிருந்து 30 மருத்துவ வாகனங்கள், 1 மருத்துவர், 1 செவிலியர், 1 ஆய்வாளர் என்ற விகிதத்தில் வரவழைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 31 மருத்துவ வாகனங்கள் உட்பட மொத்தம் 61 மருத்துவ வாகனங்கள் மூலம் பல்வேறு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நாளை (21.12.2023) 190 மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது. அம்முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் உடல்நிலைகளைப் பரிசோதித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளிலுள்ள நான்கு மண்டல பகுதிகளில் மூன்று பகுதிகளுக்கு இன்று முதல் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலப்பாளையம் மண்டலத்திற்கான நீரேற்றும் நிலையத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 27 டேங்கர் லாரிகள் மூலம் அப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டால் மண்டல அலுவலகத்தையோ, மாநகராட்சி அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
 Alert for 13 districts in next 3 hours

ஏழு மணி வரை 13 மாவட்டங்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக உள் மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கடந்த 24 மணி நேரத்தில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் மணலி, திருவிக நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏழு மணி வரை 13 மாவட்டங்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில், நீலகிரி, தேனி, கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், ராணிப்பேட்டை, நாமக்கல் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு ஏழு மணி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Chance of rain in 9 districts

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகையச் சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக  மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், தருமபுரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் திருவள்ளூர் ஆகிய 9 மாவடங்களில் இன்று (11.06.2024) இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.