Skip to main content

மருத்துவக்கல்லூரி மாணவர் திடீர் தற்கொலை; காவல்துறை விசாரணை

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

medical college student incident police investigation salem district


சேலம் அருகே தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த மாணவர், விடுதி அறையில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் அருள்மொழி குமார். இவருடைய மகன் நிர்மல்குமார் (வயது 25). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் முடநீக்கியல் துணை மருத்துவப் படிப்பை படித்து வந்தார். கல்லூரிக்கு எதிரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிப் படித்து வந்துள்ளார். இந்நிலையில், நவ. 16 ஆம் தேதி இரவு தனது அறைக்குச் சென்றவர் மறுநாள் காலை வெகுநேரமாகியும் கதவைத் திறக்கவில்லை. பெற்றோர் பலமுறை அலைபேசியில் அழைத்தும் அழைப்பை ஏற்கவில்லை. 

 

இதுகுறித்து அவருடைய பெற்றோர் சக மாணவர்களுக்கு தகவல் அளித்தனர். நவ. 17 ஆம் தேதி இரவு 09.00 மணியளவில் நண்பர்கள் நிர்மல்குமாரின் அறைக்குச் சென்றனர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. சாளரம் வழியாகப் பார்த்தபோது நிர்மல்குமார் தூக்கில் சடலமாகத் தொங்குவது தெரிய வந்தது. இதைப் பார்த்து அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். 

 

காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து அறைக்குள் சென்றனர். அவர்கள் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் சேலத்திற்கு வந்தனர். சடலமாகக் கிடக்கும் தனது மகனைப் பார்த்து கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

 

காதல் விவகாரத்தில் மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா? படிப்பில் விருப்பம் இல்லாமல் இத்தகைய முடிவை எடுத்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், அவர் அண்மையில் யார் யாரிடம் பேசினார்? என நிர்மல்குமாரின் அலைபேசியில் உள்ள அழைப்புகளின் விவரங்களின் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கல்லூரி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்