முதல் பெண் மருத்துவர், சென்னை மாகாணத்தின் முதல் சட்ட மேலவை உறுப்பினர் என்று பல்வேறு "முதல்" என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. 1886 ஜூலை 30 ம் நாள் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் நாராயணசாமி - சந்திரம்மாள் தம்பதிக்கு மகளாக பிறந்த முத்துலெட்சுமி ரெட்டி பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற தடைகளை உடைத்து கல்லூரிச் சென்று படித்து மருத்துவரானார்.
தொடர்ந்து தேவதாசி முறை ஒழிப்பு, குழந்தை திருமணத் தடுப்பு, விதவை மறுமணம் செய்யவும் உடன்கட்டை ஏறுதலைத் தடுக்கவும் போராடினார். பெண் கல்வி, உரிமைக்காக போராடியவர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உருவாக காரணமான இவர் 1968 ஜூலை 22 ந் தேதி மறைந்தார்.
இவரது நினைவை போற்றும் விதமாக புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலெட்சுமி நினைவு மாவட்ட மருத்துவமனை இயங்கியது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. அந்த வளாகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு சிலை வைக்கப்பட்டது. அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று(22.7.2024) அவரது நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி பொறுப்பு முதல்வர் டாக்டர் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.