இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஐந்து கோவில்களில் மருத்துவ மையங்களை திறக்கும் நிகழ்ச்சி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மருத்துவ மையங்களை திறந்து வைத்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவில், விருதுநகரில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பன்னாரி அம்மன் கோவில், மதுரை மாவட்டம் அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவில், தென்காசியில் உள்ள சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் என ஐந்து கோவில்களிலும் புதிதாக மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தலைமைச் செயலகத்தில் பதிவுத் துறையில் பணிபுரியும் ஆவண எழுத்தாளர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தாளர்கள் நல நிதி திட்டத்தையும் தமிழக முதல்வர் துவங்கி வைத்தார். அதேபோல் 1.50 கோடியில் ரூபாய் மதிப்பில் சிலையுடன் கட்டப்பட்ட கோவில்பட்டி எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் நினைவு அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.