
கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு கீழணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்துறை மற்றும் தொழிலாளர்துறை அமைச்சர் பங்கேற்று தண்ணீரை திறந்து வைத்தனர்.
மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்தடைந்து. கல்லணையிலிருந்து 16ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் ஜூன் 24ஆம் தேதி கீழணையை வந்தடைந்தது. அணையில் தேக்கப்பட்ட தண்ணீர் கீழணை மற்றும் வீராணம் ஏரியின் பாசன விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்கி கடலூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டத்திற்கு சம்பா சாகுபடிக்காக விகிதாச்சார அடிப்படையில் வடவாறு வாய்க்காலில் வினாடிக்கு 600 கனஅடி, வடக்கு ராஜன் வாய்க்காலில் 400 கனஅடி, தெற்கு ராஜன் வாய்க்காலில் 400 கன அடி, வீராணம் ராதா மதகு வாய்காலில் 10 கன அடி, வீராணம் புதிய மதகு மூலம் 74 கனஅடி உள்ளிட்ட சிறு சிறு வாய்க்காலில் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தமிழக வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தனர். இது குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கீழணையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு நேரடிப் பாசனமாக கொள்ளிடம், வடக்கு ராஜன், கான்சாகிப் வாய்க்கால், கவரப்பட்டு வாய்க்கால், கஞ்சன் கொல்லை, வடவார் வாய்கால் அதேபோல் தஞ்சாவூர், மயிலாடுதுறை நாகை மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம், தெற்கு ராஜன் வாய்க்கால், குமிக்கி மண்ணியார், விநாயகர் தெரு வாய்க்கால் வாயிலாக நேரடிப் பாசனமாக மொத்தம் 1,31,903 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கப்படும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பாசன வசதிக்கு ஏற்ப தண்ணீர் அளவு அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும். தண்ணீர் இருப்பு மற்றும் மழைநீர் அளவுக்கு ஏற்ப தண்ணீர் வழங்கப்படும். தண்ணீர் திறப்பதற்கு முன் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு விவசாயிகளின் ஆலோசனையைப் பெற்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியை விவசாயிகள் 40 ஆயிரம் மெட்ரிக் டன் சாகுபடி செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 108 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்காக காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார் அது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார்'' என்றார்.
நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் கடலூர் ஐயப்பன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைச்செல்வன், ஜெயங்கொண்டம் தொகுதி கண்ணன், சீர்காழி தொகுதி பன்னீர்செல்வம், விவசாய சங்கத் தலைவர்கள் இளங்கீரன், ரவீந்திரன், பாலு ரங்கநாயகி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.