Skip to main content

மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் மும்பையில் கைது; தமிழக போலீசார் அதிரடி!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Mayiladuthurai District BJP Leader arrested in Mumbai by Tn police 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்த சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்த சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘காவல்துறையினர் அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கில் தன்னை சேர்த்துள்ளது. நான் இதுவரையில் தலைமறைவாகவில்லை. முன் ஜாமீன் அளித்தால் நீதிமன்றம் அளிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நிபந்தனைகளை பின்பற்ற தயாராக இருக்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரம் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் தலைமறைவாக இருந்த அகோரத்தை தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்