தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் வாக்கு செலுத்தினர். முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். வாக்கு செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ''மே இரண்டாம் தேதி தேர்தல் முடிவு சிறப்பாக இருக்கும். தோல்வி பயத்தால் ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில் 5 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த புகார் செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியாகவும், ஆர்வத்துடனும் மக்கள் வாக்களித்து வருகின்றனர்'' என்றார்.